திருப்பாவை பாசுரம் 21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி)

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினர் ஆய்ச்சியர்கள். அவளும் உணர்ந்து எழுந்துவந்து, தோழியரே… நானும் உங்களில் ஒருத்தியன்றோ? உங்கள் காரியத்துக்காக நானும் சேர்ந்து கண்ணனை எழுப்புகிறேன். வாருங்கள் நாம் எல்லோரும் கூடி கண்ணபிரானை வேண்டிக் கொள்வோம் என்று கூறி அனைவரும் சேர்ந்து கண்ணனின் வீரத்தை ஏத்திச் சொல்லி எழுப்புகின்றனர் இந்தப் பாசுரத்தில்.
கறந்த பாலை ஏற்றுக் கொண்ட கலன்களானவை எதிரே பொங்கித் ததும்பி மேலே வழியும் படியாக இடைவிடாமல் பசுக்கள் பாலைச் சுரக்கின்றன.

பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி நற்குணத்தை உடைய பெரிய பசுக்களை சிறப்பம்சமாகக் கொண்ட நந்தகோபருக்குப் பிள்ளை ஆனவனே. நீ திருப்பள்ளி எழ வேண்டும். அடியாரைக் காப்பதில் மிகவும் சிரத்தை உடையவனே. பெருமை பொருந்தியவனே. இந்த உலகத்தில் சுடர்விளக்காய், ஒளி மயமாகத் தோன்றி நின்றவனே. துயில் எழு. எதிரிகள் உன் விஷயத்தில் தங்களுடைய வலிமை அழியப் பெற்று, உன் மாளிகை வாசலில் வேறு கதியற்று வந்துள்ளனர். உன் திருவடிகளில் சரணாகதி செய்து கிடக்கின்றனர். அதுபோல், நாங்களும் உன்னைத் துதித்து உனக்கு மங்களாசாசனம் செய்துகொண்டு உன் திருமாளிகை வாசலில் சேர்ந்துள்ளோம். எங்களுக்கு அருள் புரி என்று ஆய்ச்சியர்கள் வேண்டுகின்றனர்.

ஆய்ச்சியர்கள் தன்னை இவ்வளவுக்குப் புகழ்ந்ததைக் கேட்ட கண்ணன், ஆய்ப்பாடியில் எல்லோர் வீட்டிலும்தான் இப்படிப்பட்ட கறவைச் செல்வம் உள்ளது. இது நமக்கு ஓர் ஏற்றமா? என்று நினைத்து வாய் திறக்காதிருந்தான். அதனால் ஆய்ச்சியர் அடியார் மீது அருள் காட்டுவதில் ஊக்கம் உடையவனே என்றனர். உலகத்துக்கு வழிகாட்டப் பிறந்த ஒளியே என்றனர். நீ துயில் எழாதிருந்தால், நீ பிறந்து அதனால் படைத்த செல்வமும் குணமும் எல்லாம் மழுங்கிப் போய்விடுமே என்றனர். பின்னர் வணங்காமுடிகளும் உன் அம்புக்குத் தோற்று முரட்டுத் தனம் அழியப் பெற்று உன் அடியில் கிடப்பதுபோல், நாங்கள் உன் அன்பு குணத்தால் இழுக்கப் பெற்று உன்னை வந்தடைந்தோம் என்றனராம்.

விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.