திருப்பாவை பாசுரம் 22 (அங்கண் மா ஞாலத்து)

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் பகைவரெலாம் தம் வலிவு இழந்து, உன்னடி பணிவது போலே நாங்களும் போக்கிடம் வேறு இன்றி உன்னைப் பற்றி நின்றோம் என்றனர் ஆய்ச்சியர். இருப்பினும் இன்னும் இவர்களின் உள் மனதை அறிய ஆவல் கொண்டவனாய் கண்ணன் பேசாது கிடந்தான். அதனால் ஆய்ச்சியர், பெருமானே! இன்னும் உன் திருவுள்ளம் இரங்கவில்லையோ! புகல் வேறு இன்றி உம் திருவடி பற்றியிருக்கும் எங்கள்மீது நீ உன் அருள்கண் பார்வையைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தனர் இந்தப் பாசுரத்தில்.

அழகியதாகவும், விசாலமானதாகவும், மிகப் பெரிதாகவும் உள்ளது இந்த பூமி. இதில் ஆட்சி செய்த அரசர்கள் எல்லாம், தங்களுடைய அகங்காரம் அடங்கப் பெற்று, உன் சிம்மாசனத்தின் கீழே திரண்டு வந்து இருக்கின்றனர். அதுபோல், நாங்களும் உன் இருப்பிடத்தே புக விடைகொண்டு இங்கே நிற்கின்றோம். கிண்கிணி மணியின் வாயைப் போலே பாதி குவிந்து மலர்ந்த தாமரைப் பூவைப் போன்ற சிவந்த திருக்கண்கள் உன்னுடையது. அந்தக் கண்களால் சிறிது சிறிதாக மலர்ந்து திறந்து, எங்கள் மேல் நீ விழிக்க மாட்டாயோ? சந்திரனும் சூரியனும் உதித்ததுபோலே அழகிய திருக்கண்கள் இரண்டினாலும் நீ எங்களை நோக்கி அருள் புரிந்தால், எங்கள் மீது உள்ள பாபங்கள் எல்லாம் நசித்துப் போகுமே என்கிறார்கள் ஆய்ச்சியர்கள்.

கிண்கிணி என்பது அரைச் சதங்கை. பாதி மூடியும் பாதி பாகம் திறந்ததாகவும் செய்யப்படும் ஓர் ஆபரணம். அதைப் போல் தாமரை மலர் பாதி குவிந்தும், பாதி திறந்ததுமாக இருந்ததாம். கண்ணனும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்தானே. அதுவும் ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரையின் நிலை அதுதானாம். இந்த ஒப்புமையை கண்ணபிரானின் திருக்கண்களுக்குக் காட்டுகிறார் ஸ்ரீஆண்டாள்.

விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.