கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
விளக்கம்:
முந்தைய இரு பாசுரங்களில் மார்கழி நீராட்ட நோன்பை எடுத்துக் கூறி, அதற்கு வேண்டிய சங்கு முதலான உபகரணங்களைச் சொன்ன ஆய்ச்சியர்கள், நோன்பினை முடிக்கும்போது அலங்கரிக்க ஆடை ஆபரணங்களைப் பெற்று உடுத்தி, பால் சோறு உண்டு பறை தருமாறு கண்ணனிடம் கோரினர். அதற்கு கண்ணன், பெண்களே. உங்கள் கருத்து இவ்வளவு என்று எனக்குத் தோன்றுவில்லை. நீங்கள் கேட்டதையும் இன்னும் சில கேட்டால் உங்கள் நிலையை அறிந்து அதையும் நான் தரவேண்டும் என்றால், அதற்காக நீங்கள் கடைபிடிக்கும் உபாயம் ஏதும் உண்டோ? என்று கேட்டான் கண்ணன். அதற்கு பதிலாக ஆய்ச்சியர், எங்களுக்கு இரங்கி நீ தயை காட்ட வேண்டும் என்று கண்ணனிடம் பிரார்த்திக்கும் பாசுரம் இது.
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னே சென்று காடு சேர்ந்து, உடலுக்கு ஊக்கமூட்டும் உணவுகளையே உண்டு திரிகிறோம். அறிவு குறைவுப் பட்டிருக்கும் எங்கள் இடைக்குலத்தில் வந்து பிறந்தாய். உன்னைப் பெறுவதற்குத் தக்க புண்ணியம் செய்தவர்களாகவும் நாங்கள் இல்லை. ஆயினும் எங்கள் இறைவனான கண்ணபிரானே. உன்னோடு எங்களுக்கு உண்டான உறவானது, இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாதது. உலக மரியாதையாகிற எதையும் நாங்கள் அறியாத சிறு பிள்ளைகளாக உள்ளோம். உன்னை அன்பினால் சிறிய பேராலே நாங்கள் அழைத்ததைக் குறித்து கோபிக்காதே. உன்னை ஆராதிப்பவர்களை அன்பாக அணுகும் நீ எங்கள் மீது கோபம் கொள்ளாமல், பறையைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர்.
பெருமானுடன் தங்களுக்கு ஏற்பட்ட உறவை எடுத்துக் காட்டி, முதலடியில் பசுக்களின் பின்னே போய்த் திரிந்து உடல் வளர்க்கிறோம்; எங்களுக்கு நற்கருமம் இல்லை என்றும், இரண்டாம் அடியில், அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து என்றும் தங்களைத் தாழ்த்தி, குறை ஒன்றுமில்லாத கோவிந்தா என்று நான்காம் அடியில் அவனைப் போற்றி, ஐந்தாம் அடியில் உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று பிரிக்க முடியாத பந்தத்தைக் கூறி, ஏழாம் அடியில் சீறியருளாதே என்று, தாங்கள் முன்னர் ஏதேனும் அவமரியாதையாக நடந்துகொண்டால் அதற்கு மன்னிப்பும் கேட்டு, எட்டாம் அடியில் “இறைவா நீ தாராய் பறை” என்று முடிக்கிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்