
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
இதுவரையிலான பாசுரங்களில் பறை பறை என்று ஒன்றைக் கேட்டு கண்ணனை நோக்கி நோன்பு நோற்பதாகக் கூறிய ஆயர் சிறுமியர், இந்தப் பாசுரத்தில் அதனைத் தவிர்த்து வேறொன்றைக் கேட்கின்றனர். அது, கண்ணனிடம் செய்யும் திருவடிக் கைங்கரியத்தையாம்! உலக மக்களின் பொருட்டு, நோன்பு என்பதையும் அதன் மூலம் பெறும் பறையையும் ஒரு சாக்காக வைத்து, உண்மையில் அவர்கள் வேண்டியது கண்ணனையே! அதனால், அவனுக்கு நித்திய திருவடிக் கைங்கரியம் செய்யும் பேற்றையும், நொடிப்பொழுதும் நீங்காதிருக்கும் பேரருளையும் பிறவா வரம் வேண்டியும் கண்ணனைப் பிரார்த்திக்கிறார்கள் இந்தப் பாசுரத்தில்.
கண்ணபிரானே! விடியற்கால நேரத்தில் இவ்விடத்துக்கு வந்து, உன்னைத் தெண்டனிட்டு உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாசனம் செய்வதற்கான பலனை, அதன் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பாலும் தயிரும் வெண்ணெயும் விளைபொருளுமாக உண்ணுகின்ற இடையர் குலத்தில் பிறந்த நீ, எங்கள் அந்தரங்கக் கைங்கரியத்தினை ஏற்று, எங்களைக் ஏற்காமல் போகாதே! இன்று உன்னால் கொடுக்கப்படுகிற இந்தப் பறையினைப் பெறுவதற்காக நாங்கள் வரவில்லை! காலம் உள்ளளவும், ஏழேழ் பிறவிக்கும், உன்னுடைய எந்த அவதாரங்களிலும், உன்னோடு உறவு உடையவர்கள் ஆவோம். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமை செய்யக் கடவோம். உன் மீதான பக்தியை மாற்றமாட்டோம்; எங்களின் மற்றைய இகலோக விருப்பங்களைத் தவிர்க்கும்படி, எங்களுக்கு நீயே அருளவேண்டும் என்று ஆயர்சிறுமியர் பிரார்த்தித்தனர்.
உன் பொற்றாமரை அடியைப் போற்றுதற்கான நோக்கம் என்வென்று கேட்டாய். பாற்கடல் நடுவே பரமபதத்தில் நாயகனாக விளங்கும் நீ, உன் இருப்பிடத்தைத் தவிர்த்து இங்கே இடைக்குலத்தில் வந்து பிறந்தாய். அதற்கு ஒரு பயன் வேண்டுமன்றோ? எங்களிடம் நீ கைங்கரியத்தை ஏற்காது இருப்பாயாகில் உன்னுடைய இப்பிறவியே பயனற்றதாகுமே! என்கின்றனர்.
மோட்சத்தை விரும்பும் முமுட்சுவானவன், கண்ணனையே சரணடைந்து, வேறு பல விஷயாந்தரங்களில் இச்சை கொள்வதைத் தவிர்த்து, கண்ணன் மீதான பக்தியிலேயே இருப்பதை மற்றை நம் காமங்கள் மாற்றேல் என்றார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்