உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தது. 45 நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
இதன் இறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனையான நோசோமி ஓகுஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். 38 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21க்கு 7, 21க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அசத்தினார்.
போட்டியில் வெற்றி பெற்ற பிவி சிந்துவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 2017, 2018ம் ஆண்டுகளிலும் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு வந்த போதிலும் இந்த முறை சாம்பியன் பட்டத்தை சிந்து கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய சிந்து, இந்த பதக்கத்தை பிறந்தநாள் கொண்டாடும் தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சிந்துவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் என்றும், அவரின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி கோடிக் கணக்கானவர்களை கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பி.வி சிந்துவால் மீண்டும் இந்தியா பெருமையடைகிறது என்று பாராட்டியுள்ள பிரதமர் மோடி, இளம்தலைமுறையினருக்கு பி.வி சிந்துவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் சிந்துவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் என சிந்துவுக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.