பிசிசிஐ தலைவர் ஆகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்?

அவர் வங்காள கிரிக்கெட் சங்கத்தை திறம்பட நடத்திய அனுபவம் கொண்டவர். அதனால் கங்குலி தேர்வாவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

11 May 22 ganguly

பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிஜேஷ் படேல்தான் அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் நடந்துள்ளது.

பிசிசிஐ-யில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க நீதிபதி லோதா தலைமையிலான குழுவை அமைத்தது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது

இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ-யின் தேர்தல்களும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பிரிஜேஷ் படேலை போட்டியிட வைத்து அவரை வெற்றி பெற வைக்க எண்ணினார் தமிழகத்தின் ஸ்ரீநிவாசன். .

இந்த நிலையில், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலியின் பெயரும், பிசிசிஐ தலைவர் பதவிக்கு அடிபட்டது.

கங்குலிக்காக களமிறங்கி, அவரை தலைவராக்கும் செயல்களில் இறங்கினார் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஸ்ரீநிவாசன் கடந்த சனிக்கிழமை சந்தித்ததாகவும், அதே நாளில் கங்குலியும் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று மும்பையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிசிசிஐ-யின் அனைத்து உறுப்பினர்களும் அதிகாரபூர்வமற்ற வகையில் சந்தித்துள்ளனர் இதில் சில முக்கிய விவாதங்கள் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது

இந்த விவாதங்களின் போது சவுரவ் கங்குலிக்கு ஆதரவு அளிப்பது என பெரும்பாலானவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

இதன்மூலம் பிசிசிஐ தலைவருக்கான போட்டியிலிருந்து பிரிஜேஷ் படேல் விலகும் முடிவில் இருப்பதாகவும், அவர் ஐபிஎல் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கங்குலியைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத பட்சத்தில் கங்குலி ஒருமனதாக பிசிசிஐ-யின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா பிசிசிஐ-யின் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. .

இது தொடர்பாக பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “ மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் கங்குலியின் பெயர் முன்மொழியப்பட்டது. 10 மாதங்கள்தான் கங்குலி தலைவர் பொறுப்பில் இருப்பார், எனினும் அவர் வங்காள கிரிக்கெட் சங்கத்தை திறம்பட நடத்திய அனுபவம் கொண்டவர். அதனால் கங்குலி தேர்வாவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கடந்த 33 மாதங்களாக நீதிமன்றம் நியமித்த குழுவால் கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இது அனைத்தையும் குறைந்த காலத்தில் கங்குலி சரி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்..

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :