
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது. இதற்காக வந்த தமிழர்கள் மற்றும் உ.பி.யின் வீரர்களுக்கு இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இருமாநில வீரர்களுடன் மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், அவரது இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உரையாடினர்.
அப்போது அமைச்சர் அனுராக், “புதிய கல்விக் கொள்கையின்படி ’ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் வாரணாசி மற்றும் தமிழகத்திற்கு இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள உறவும் வலுப்படுத்தப்படுகிறது.
இதற்காக இங்கு நவம்பர் 17 இல் தொடங்கி ஒரு மாதத்திற்காக காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்று வருகிறது. இது நமது பிரதமர் எடுத்த முயற்சியால் நடைபெறுகிறது. இதில், இருமாநிலதாருக்கும் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்த 8 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்று நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியும் வாரணாசி மற்றும் தமிழகத்திற்கு இடையிலான உறவை வலுப்படுத்தும். இதன்மூலம், நம் நாட்டில் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவம் புரியும்” எனத் தெரிவித்தார்.
இந்த நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நேற்று, மொத்தம் 20 ஓவர்களுக்காக நடைபெற்றது. இதில் உ.பி.,யிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் தோல்வி அடைந்தது. முன்னதாக டாஸ் வென்ற உ.பி., வீரர்கள் 7 விக்கெட் இழப்புடன் 198 ரன்கள் எடுத்தனர். இதனால், 199 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி எனும் நிலையில் தமிழக வீரர்கள் விளையாட்டை துவக்கினர். மூன்று விக்கெட் இழப்புடன் இவர்களுக்கு 144 ரன்கள் கிடைத்தன. இதனால், உ.பி. 55 ரன்களுடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் மத்திய அமைச்சர் அனுராக், தம் விருப்பத்திற்காக ஒரு ஓவருக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் செய்தார். பரிசளிப்பு விழாவில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி, பனாரஸ் இந்து பல்கலைகழக துணைவேந்தர் சுதிர் குமார் ஜெயின், நோடல் அதிகாரியான பேராசிரியர் ஹரீஷ் சந்திர ராத்தோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று மேலும் இரண்டு விளையாட்டு போட்டிகள் தமிழகம் மற்றும் உ.பி. மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகின்றன. இதில், டேபிள் டென்னிஸ் மற்றும் பூப்பந்து ஆகியன இடம் பெற்றுள்ளன. இதுபோல், காசி தமிழ்ச் சங்கமம் பல்வேறு வகை பிரிவுகளில் காசி தமிழ்ச் சங்கமத்தில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.