
இந்தியா நியூசிலாந்து முதல் டி20 போட்டி (ராஞ்சி, 27.01.2023)
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்து அணி (176/6, மிட்சல் 59, கான்வே 52, ஆலன் 35, சுந்தர் 2/22) இந்திய அணியை ( 155/9, சுந்தர் 50, சூர்யகுமார் 47, ஹார்திக் 21, பிரேஸ்வெல் 2/31, சாண்ட்னர் 2/11, ஃபெர்கூசன் 2/33) 21 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் ஆலன் (35), கான்வே (52) இருவரும் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். ஆனால் ஐந்தாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் ஆலன், சாப்மென் இருவரும் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் சுழல் பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள்; ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக மோசமாகப் பந்து வீசினார்கள்.
20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது. அதுவும் அந்த அர்ஷதீப் வீசிய கடைசி ஓவர் மறக்க முடியாத மோசமான ஓவர்; அதில் அவர் 27 ரன்கள் கொடுத்தார்.
பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு மோசமான தொடக்கம் அமைந்தது. இஷான் கிஷன் (4 ரன்), ராகுல் திரிபாதி (ரன் எடுக்கவில்லை), ஷுப்மன் கில் (7 ரன்) ஆகியோர் நாலாவது ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் (47 ரன்), ஹார்திக் பாண்ட்யா (21 ரன்) இருவரும் ஓரளவிற்கு இந்திய அணியின் ஸ்கோரை மேம்படுத்தினர். ஆனால் சூர்யா 12ஆவது ஓவரிலும் பாண்ட்யா 13ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் வாஷிங்டன் சுந்தர் (50 ரன்) ஒரு பக்கம் வெற்றிக்காக ஆடிக்கொண்டிருக்க மறு பக்கம் ஒவ்வொருவராக ஆட்டமிழந்துகொண்டிருந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 155 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அர்ஷதீப் அவருடைய கடைசி ஓவரில் 27 ரன் தராவிட்டால் ஒருவேளை இந்திய அணி வென்றிருக்கலாமோ என்னவோ.
மொத்தத்தில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் இந்திய அணியை விட நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது. இந்த வெற்றியுடன் நியூசிலாந்து இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. டேரியல் மிட்சல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.