
மகளிர் ஐபிஎல் போட்டிகள் 2023
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
இந்திய கிரிக்கட் போர்ட் இந்த ஆண்டு முதல் ஆண்கள் ஐ.பி.எல் போலவே பெண்கள் ஐ.பி.எல் நடத்துகிறது. இதற்கு ‘டாடா மகளிர் ஐ.பி.எல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மார்ச்சு மாதம் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மார்ச்சு 26ஆம் தேதி முடியவிருக்கின்றன. கோப்பையை வெல்கின்ற அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது.
இந்த முதலாமாண்டு போட்டிகளைப் பெண்கள் பார்க்க டிக்கட் கட்டணம் கிடையாது. தொடக்க விழா மார்ச்சு மாதம் 4ஆம் தேதி டி.ஒய். படீல் மைதானத்தில் நடைபெற்றது. ஏ.பி. தில்லான், கீர்த்தி சனான், கியாரா அத்வானி ஆகியோர் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். போட்டிகள் மும்பையின் ப்ராபோர்ன் மற்றும் டி.ஒய். பட்டீல் மைதானங்களில் நடைபெறுகிறது.
போட்டியில் பின்வரும் அணிகள் கலந்துகொள்கின்றன:
(1) டெல்லி கேபிடல்ஸ் – அணித்தலைவி மேக் லேனிங், ஆஸ்திரேலிய வீராங்கனை
(2) குஜராத் ஜெயிண்ட்ஸ் – அணித்தலைவி பெத் மூனி, ஆஸ்திரேலிய வீராங்கனை
(3) மும்பை இந்தியன்ஸ் – அணித்தலைவி ஹர்ம்ப்ரீத் கௌர், இந்திய வீராங்கனை
(4) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – அணித்தலைவி ஸ்மிருதி மந்தனா, இந்திய வீராங்கனை
(5) உ.பி. வாரியர்ஸ் – அணித்தலைவி அலிசா ஹீலி, ஆஸ்திரேலிய வீராங்கனை
தொடக்கச்சுற்றில் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றன. ஐந்து அணிகளும் தலா எட்டு போட்டிகள் விளையாடியுள்ளன. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் இரண்டு முறை விளையாடியுள்ளன. முதல் மூன்று இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த இறுதிச் சுற்றிற்குச் செல்கின்றன.
தொடக்கச் சுற்று மார்ச்சு 20ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச்சு 20ஆம் தேதி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகள் தொடரின் முதல் மூன்று இடம் பிடிக்கும் அணிகளை முடிவுசெய்தௌ என்பது சிறப்பான செய்தி.
தொடக்கத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய மும்பை அணி கடைசி ஆட்டங்கள் இரண்டில் தோல்வியுற்று 12 புள்ளிகளுடன், குறைவான ரன் ரேட்டால் இரண்டாமிடம் பிடித்தது. டெல்லி அணி 12 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டால் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
உ.பி வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தது. இந்த அணி வருகிற 24ஆம் தேதி டி.ஒய். பட்டீல் மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் இறுதிப்பொட்டியில், 26ஆம் தேதி ப்ரபோர்ன் மைதானத்தில் விளையாடும்.
இதுவரை விளையாடிய போட்டிகளில் மேக் லேனிங் 310 ரன்கள் அடித்து பேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் 14 விக்கட்டுகள் எடுத்து சோஃபி முதலிடத்தில் இருக்கிறார்.