
ஐ.பி.எல் 2023 – இரண்டாம் நாள் – 01.04.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் இரண்டாம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது.
பஞ்சாப் vs கொல்கொத்தா
பஞ்சாப் அணி (191/5, பனுகா ராஜபக்ஷா 50, ஷிகர் தவான் 40, சாம் கரன் 26, பிரப்சிம்ரன் சிங் 23, டிம் சௌதீ 2/54) கொல்கொத்தா அணியை (16 ஓவரில் 146/7, வெங்கடேஷ் ஐயர் 34, ரசல் 35, ராணா 24, ரஹமானுல்லா 22, அர்ஷதீப் சிங் 3/19) டக்வொர்த் லூயிச் முறையில் 7 ரன் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற கொல்கொத்தா அணி பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னது. பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினர். 20 ஓவர் முடிவில் ஓவருக்கு 9.55 ரன் விகிதத்தில் அந்த அனி ஐந்து விக்கட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின்னர் ஆட வந்த கொல்கொத்தா அனி முதலில் இருந்தே தடுமாறிகொண்டிருந்தது. பத்தாவது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு அந்த அணி 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தோல்வி நிச்சயம் என்ற நிலையில் ரசல் 19 பந்துகளில் 35 ரன் அடித்து கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தினார். மழைக்கான வாய்ப்பிருந்ததால் வெற்றி வாய்ப்பைப்பெற அந்த அணி முயற்சிசெய்தது. ஆனால் 15ஆவது ஓவரில் ரசலும் 16ஆவது வெங்கடேஷ் ஐயரும் ஆட்டமிழக்க, மழையும் பெய்யத்தொடங்க, கொல்கொத்தா அணி தோல்வியைத் தழுவியது.
லக்னோ vs டெல்லி
லக்னோ அணி (193/6, மெயர்ஸ் 73, நிக்கொலஸ் பூரன் 36, கலீல் அஹமத் மற்றும் சக்காரிய தலா 2 விக்கட்டுகள்) டெல்லி அணியை (143/9, வார்னர் 56, ரோஸ்கோ 30, மார்க் வுட் 5/14) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடினார். 38 பந்துகளில் ஏழு சிக்சர், 2 ஃபோருடன் அவர் 73 ரன்கள் அடித்தார்.
அணித்தலைவர் கே.எல். ராகுலைத் தவிர அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின்னர் ஆட வந்த டெல்லி அணி வீரர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்க் ஆண்ட்ரூ வுட்டின் (Mark Andrew Wood) பந்து வீச்சில் நிலைகுலைந்து போனது.
வுட் இங்கிலாந்து அணியின் பேட்டர் மற்றும் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர். அவர் வீசிய முதல் ஓவரில் இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. அவரது இரண்டாவது ஓவரில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார்.
வார்னரும் போவெல்லும் ஆடிக் கொண்டிருந்தபோது வுட் ஒரு ஓவர் வீசினார்; அதில் 7 ரன்கள் கொடுத்தார். இறுதியாக 20ஆவது ஓவரை வீச வந்தார்; அப்போது இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
அவரைத்தவிர ஆவேஷ்கானும் ரவி பிஷ்னோய் இருவரும் தலா2 விக்கட்டுகள் எடுத்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விகண்டது.