
இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டி-20 ஆட்டம்- ராஜ்கோட்-28 ஜனவரி 2025
இங்கிலாந்து அணி வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணி (20 ஓவர்களில் 171/9, பென் டக்கட் 51, லியம் லிவிங்க்ஸ்டோன் 43, ஜாஸ் பட்லர் 24, வருண் சக்கரவர்த்தி 5/24, ஹார்திக் பாண்ட்யா 2/33, அக்சர் படேல், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கட்) இந்திய அணியை (20 ஓவர்களில் 145/9, ஹார்திக பாண்ட்யா 40, அபிஷேக ஷர்மா 24, திலக் வர்மா 18, அக்சர் படேல் 15, சூர்யகுமார் யாதவ் 14, ஜேமி ஓவர்டன் 3/24, ப்ரைடன் கார்ஸ் 2/28, ஆர்ச்சர் 2/33, அதில் ரஷீத் 1/15) 26 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் அர்ஷதீப் சிங்கிற்குப் பதிலாக முகமது ஷமி ஆடினார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (5 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கட் (28 பந்துகளில் 51 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) அணித்தலைவர் ஜாஸ் பட்லருடன் (22 பந்துகளில் 24 ரன்) இணைந்து விரைவாக ரன் குவித்தார்.
ஒன்பதாவது ஓவரில் ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்க, அதன் பின்னர் விளையாட வந்த ஹாரி ப்ரூக் (8 ரன்) 13ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்னர் 10ஆவது ஓவரில் பென் டக்கட் அவுட் ஆனார். வருண் சக்ரவர்த்தியின் அபாரமான பந்து வீச்சால் மள, மளவென விக்கட்டுகள் விழுந்தன. ஆயினும் இறுதிக்கட்டத்தில் லிவிங்க்ஸ்டோன், அதில் ரஷீத், மார்க் வுட் ஆகியொரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது.
அதன் பின்னர் ஆட வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (3 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா (14 பந்துகளில் 24 ரன்), சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 14 ரன்), திலக் வர்மா (14 பந்துகளில் 18 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (15 பந்துகளில் 6 ரன்) என 13 ஓவர்களுக்குள் இந்திய அணி, 12.1 ஓவரில் 85 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்தது.
ஹார்திக் பாண்ட்யாவும் (35 பந்துகளில் 40 ரன்), அக்சர் படேல்-உம் (16 பந்துகளில் 15 ரன்) சற்று நிலைத்து ஆடியபோதும் இந்திய அணியின் ரன்ரேட் இங்கிலாந்து அணியின் ரன்ரேட்டைவிட எந்த நிலையிலும் அதிகரிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 9 விக்கட் இழப்பிற்கு 145 ரன் என்ற அளவிலேயே இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் முதன் முறையாக 26 ரன் கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்றது.
ஆட்ட நாயகனாக வருண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். இன்று தோல்வியடைந்த போதும் இந்திய அணி தொடரில் 2-1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் ஜனவரி 31ஆம் தேதி புனேயில் நடைபெறும்.