
இந்தியா இங்கிலாந்து நான்காவது டி-20 ஆட்டம்- புனே-31 ஜனவரி 2025
இந்திய அணி தொடரை வென்றது
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (20 ஓவர்களில் 181/9, ஷிவம் துபே 53, ஹார்திக் பாண்ட்யா 53, ரிங்கு சிங் 30, அபிஷேக் ஷர்மா 29, மகமூத் 3/35, ஓவர்டன் 2/32, கார்சே, அதில் ரஷீத் தலா 1 விக்கட்) இங்கிலாந்து அணியை (19.4 ஓவர்களில் 166, ஹாரி ப்ரூக் 51, பென் டக்கட் 39, பில் சால்ட் 23, ஓவர்டன் 19, ஆர்ச்சர் 10, ரவி இஷ்னோய் 3/28, ஹர்ஷித் ராணா 3/33, வருண் 2/28, அர்ஷதீப் சிங், அக்சர் படேல் தலா 1 விக்கட்) 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் இந்திய அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமிக்கு பதிலாக அர்ஷதீப் சிங் ஆடினார். துருவ் ஜுரலுக்குப் பதிலாக ரிங்கு சிங் விளையாடினார்.
வாஷிங்க்டன் சுந்தருக்குப் பதிலாக ஷிவம் துபே விளையாடினார். இந்திய அணி பந்து வீச வரும்போது ஹர்ஷித் ராணா concussion substitute – காயமடைந்தவருக்குப் பதிலாக விளையாடுபவர் – ரூபத்தில் விளையாடி மூன்று விக்கட்டுகளும் எடுத்தார்.
இந்திய அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (ஒரு ரன்), இரண்டாவது பந்தில் திலக் வர்மா (பூஜ்யம் ரன்), கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் (பூஜ்யம் ரன்) ஆகிய மூவரும் ஆட்டமிழந்து இந்திய அணி 12/3 என்ற ரன் கணக்கில் இருந்தது. இன்று இங்கிலாந்து அணி சார்பில் புதிதாக விளையாடிய மகமூத் மூன்று விக்கட்டுகளையும் தனது முதல் ஓவரிலேயே எடுத்தார்.
அதன் பின்னர் அபிஷேக் ஷர்மா (19 பந்துகளில் 29 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) எட்டாவது ஓவரிலும் ரிங்கு சிங் (26 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், ஒரு சிக்சர்) 11ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிவம் துபே (34 பந்துகளில் 53 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (30 பந்துகளில் 53 ரன், 4 ஃபொர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பாக அடி இந்திய அணியை 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுக்க வைத்தனர்.
அதன் பின்னர் ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (23 ரன்) மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கட் (19 பந்துகளில் 39 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த சமயத்தில் பந்து வீச வந்த இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தி, விக்கட்டும் எடுத்தனர்.
அணித்தலைவர் ஜாஸ் பட்லர் (2 ரன்), ஹாரி ப்ரூக் (26 பந்துகளில் 51 ரன்), லிவிங்க்ஸ்டோன் (9 ரன்), ஜாக்கப் பெதல் (6 ரன்), ப்ரைடன் கார்ஸ் (பூஜ்யம் ரன்), ஓவர்டன் (19 ரன்), ஆர்ச்சர் (பூஜ்யம் ரன்), அதில் ரஷீத் (10ரன்), மகமூத் (1 ரன்) எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணியால் 166 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆட்ட நாயகனாக ஷிவம் துபே அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3-1 என்ற ஆட்டக் கணக்கில் வென்றுள்ளது. அடுத்த, ஐந்தாவது டி20 ஆட்டம் பிப்ரவரி 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்.