
இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது ஒருநாள் ஆட்டம் – கட்டாக் – 9 பிப்ரவரி 2025
ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம்; இந்திய அணி வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (49.5 ஓவர்களில் 304, ஜோரூட் 69, பென் டக்கட் 65, லியம் லிவிங்க்ஸ்டோன் 41, ஜாஸ் பட்லர் 34, ஹாரி ப்ரூக் 31, பில் சால்ட் 26, ஜதேஜா 3/35, முகம்மது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹார்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கட்) இந்திய அணி (38.4 ஓவர்களில் 251/6, ரொஹித் ஷர்மா 119, ஷுப்மன் கில் 60, ஷ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 52, அதில் ரஷீத், ஓவர்டன், லிவிங்க்ஸ்டோன் தலா ஒரு விக்கட்) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் முதலில் மட்டையாடத்தீர்மானித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக விராட் கோலி ஆடினார். இங்கிலாந்து அணியின் தொடக்கம் மிகவும் பிரமாதமாக இருந்தது.
பவர்ப்ளே ஓவர்களான முதல் 10 ஓவர்களில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 77 ரன் எடுத்திருந்தது. பில் சால்ட் (29 பந்துகளில் 26 ரன்), பென் டக்கட் (56 பந்துகளில் 65 ரன், 10 ஃபோர்), ஜோ ரூட் (72 பந்துகளில் 69 ரன், 6 ஃபோர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். ஹாரி ப்ரூக் (52 பந்துகளில் 31 ரன்), ஜாஸ் பட்லர் (35 பந்துகளில் 34 ரன்), லிவிங்க்ஸ்டோன் (32 பந்துகளில் 41 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடியபோதும் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் சற்றே ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினர் ரவீந்தர ஜதேஜா தன்னுடைய சுழல் ஜாலத்தில் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (52 பந்துகளில் 60 ரன், 9 ஃபோர் 1 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (90 பந்துகளில் 119 ரன், 12 ஃஃபோர், 7 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.
மூன்றாவதாகக் களம் இறங்கிய விராட் கோலி இன்றும் சோபிக்கவில்லை. அதன் பின்னர் வந்த அனைத்து இந்திய வீரர்களும் ரன்ரேட் குறையாமல் ஆடினர்.
ஷ்ரேயாஸ் ஐயர் (47 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) அக்சர் படேல் (43 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர்) என அனைவரும் சிறப்பாக ஆடினர். இறுதியில் 44.3 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 308 ரன் எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது. ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் ஜொலித்தது நம்முடைய பழைய கவலைகளை மாற்றியது.
ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அடுத்த மூன்றாவது ஒருநாள் ஆட்டம் அகமதாபாத்தில், இரவுபகல் ஆட்டமாக பிப்ரவரி 12ஆம் நாள் நடைபெறும்.