
சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா- நியூசிலாந்து – 02.03.2025
இந்திய அணி அபார வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (249/9 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 79, அக்சர் படேல் 49, ஹிருதிக் பாண்ட்யா 45, ஹென்றி 5/42, ஜேமிசன், ரூர்கி, சாண்ட்னர், ரவீந்திரா தலா ஒரு விக்கட்) நியூசிலாந்து அண்யை (45.3 ஓவர்களில் 205, கேன் வில்லியம்சன் 81, மிட்சல் சாண்ட்னர் 28, வில் யங் 22, வருண் சக்ரவர்த்தி 5/42, குல்தீப் யாதவ் 2/56, பாண்ட்யா, அக்சர் படேல், ஜதேஜா தலா ஒரு விக்கட்) 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் மிட்சல் சாண்ட்னர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (17 பந்துகளில் 15 ரன்) மற்றும் ஷுப்மன் கில் (7 பந்துகளில் 2 ரன்) ஆறு ஓவர்கள் முடிவதற்குள் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து விராட் கோலியும் (14 பந்துகளில் 11 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (98 பந்துகளில் 79 ரன்) ஆட்டத்தில் அணி எழுச்சி பெற்றது. அவருக்கு அக்சர் படேல் (61 பந்துகளில் 42 ரன்) கே.எல். ராகுல் (29 பந்துகளில் 23 ரன்) துணையிருந்தனர். ஹார்திக் பாண்ட்யா (45 பந்துகளில் 45 ரன்) 48ஆவது ஓவரில் அதிரடியாக இரண்டு ஃபோர், ஒரு சிக்சர் அடித்து அணியின் ஸ்கோர் உயர வழிசெய்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 249 ரன் எடுத்தது.
வெற்றிக்கு 250 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடத்தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மிகச் சுமாரான தொடக்கம் தந்தனர். ரச்சின் ரவீந்திரா (6 ரன்) 4ஆவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங் (22 ரன்) 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் (81 ரன்) 41 ஓவர்கள் வரை விளையாடி, 81 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்களான டரில் மிட்சல் (35 பந்துகளில் 17 ரன்), டாம் லேதம் (20 பந்துகளில் 14 ரன்), கிளன் பிலிப்ஸ் (8 பந்துகளில் 12 ரன்), ப்ரேஸ்வெல் (2 ரன்), சாண்ட்னர் (31 பந்துகளில் 28 ரன்), மேட் ஹென்றி (2 ரன்), அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்தியா இன்று நான்கு சுழல் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நால்வரும் அருமையாக பந்துவீசினர்.
நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தவித்தனர். அவர்களுள் வருண் சக்ரவர்த்தி ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்தார். நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 205 ரன் எடுத்தது. இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா அணி மூன்று ஆட்டங்கள் ஆடி மூன்றிலும் வெற்றி பெற்று, ஆறு புள்ளிகளுடன் குரூப்பில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இரண்டு ஆட்டங்களில் வென்று 4 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. வங்கதேச அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை.
குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா (5 புள்ளிகள்), மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் (4 புள்ளிகள்) புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.
முதல் அரையிறுதி ஆட்டம் மார்ச்சு 4ஆம் தேதி துபாயில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மார்ச்சு ஐந்தாம் தேதி லாகூரில் நடைபெறும்.
இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக வருண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார்.