உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷ்ய அணி, 5-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம், வெள்ளைப் பூனை அசிலிஸ் கணிப்பு பலித்துள்ளது.
உலகக்கோப்பையில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரஷ்ய அணி, முதல் லீக் போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் களம் கண்ட ரஷ்யா, ஆரம்பம் முதலே தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதன் எதிரொலியாக, 12 நிமிடத்தில், பெனால்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து அலெக்ஸாண்டர் குளோவின் தூக்கி அடித்த பந்தை, கஸின்ஸ்கி தலையால் முட்டி கம்பத்திற்குள் தள்ளினார். இதன் மூலம், 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல் கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இதையடுத்து, 43-வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் தடுப்பு அரணை கடந்து, லாவமாக பந்தை கடத்திச் சென்ற டெனிஸ் செரிஷேவ் அடுத்த கோல்-ஐ பதிவு செய்தார்.
முதல் பாதியின் முடிவில் 2-0 என முன்னிலை பெற்ற ரஷ்ய அணி தொடந்து வேகம் காட்டியது. இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் சவுதி அரேபிய வீரர்கள் திணறினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 71-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஆட்ட நேரத்தில் காலவிரயம் செய்யப்பட்ட நேரத்தை ஈடுகட்டும் வகையில், பிரதான நேரமான 90 நிமிடங்கள் முடிந்த பின், ஸ்டாப்பேஜ் டைம் வழங்கப்பட்டது. தோல்வி உறுதியானதால் சவுதி அரேபிய வீரர்கள் சற்று தளர்வாக காணப்பட்டனர். அதேவேளை, உற்சாக மிகுதியில் இருந்த ரஷ்ய வீரர்கள் மேலும் 2 கோல்கள் அடித்து மிரட்டினர்.
முடிவில், 5-0 என்ற கோல்கணக்கில் ரஷ்யா வெற்றிபெற்றது. இப்போட்டியில், மாற்று வீரராக களமிறங்கிய டெனிஸ் செரிஷேவ் இரண்டு கோல்கள் அடித்து நாயகனாக ஜொலித்தார். மேலும், 1930 முதல் நடைபெறும் உலகக்கோப்பையில், போட்டியை நடத்தும் அணி, தொடக்க ஆட்டத்தில் தோல்வியே சந்தித்ததில்லை என்ற சாதனை தற்போதும் நீடிக்கிறது. அத்துடன், தொடக்க போட்டியில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற 2-வது அணி என்ற சாதனையை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. முன்னதாக, 1934 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இத்தாலி 7-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றதே சாதனையாக இருந்து வருகிறது.
முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, வெள்ளைப் பூனை ‘அசிலிஸ்’ ரஷ்யா வெற்றிபெறும் என கணித்திருந்தது. அதன், ஆருடம் தற்போது பலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.