ஸ்பாட் பிக்சிங் குறித்து தகவல் அளிக்காத உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2015 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 2 பந்துகளை அடிக்காமல் விட்டால் 2 லட்சம் டாலர் தருவதாக சூதாட்ட தரகர்கள் பேரம் பேசினார்கள் என்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் உமர் அக்மல் கூறி இருந்தார்.
இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் உமர் அக்மலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நாளை ஆஜராகி சூதாட்டம் குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உமர் அக்மல் குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் அவர் 4 ரன்னில் ஆட்டம் இழந்ததோடு, அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் மண்ணை கவ்வியதும் குறிப்பிடத்தக்கது.