இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பார்ட்னர்ஷிப் 100-ஐ தாண்டிச் சென்றது. 63-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பேர்ஸ்டோவ் லெக்சைடு அடித்து விட்டு வேகமாக ஓடினார். அவர் இரண்டு ரன்கள் ஓட ஜோ ரூட்டை அழைத்தார்.
ஜோ ரூட் வேகமாக ஓடினார். அதேவேளையில் விராட் கோலி பந்தை துரத்தி பிடித்து அற்புதமான வகையில் த்ரோ செய்தார். பந்து டைரக்டாக ஸ்டம்பை தாக்கியது. இதனால் ஜோ ரூட் 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3 ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இவரது சதத்தால் இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் பேட்டை கீழே போட்டார். இதை மைக்-டிராப் கொண்டாட்டம் (mic-drop celebration) என்பார்கள்.
இதை ஞாபகத்தில் வைத்திருந்த விராட் கோலி நேற்று ஜோ ரூட் ஆட்டமிழந்ததும் மைக்-டிராப் கொண்டாட்டத்தை சைகையின் மூலம் செய்து காட்டி ஜோ ரூட்டை வெறுப்பேற்றினார். இதன்மூலம் விராட் கோலி செய்தது சரியா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.