அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் எலிஸ் மெர்டன்சுடன் (பெல்ஜியம்) மோதிய குவித்தோவா 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த மெர்டன்ஸ் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி மெர்டன்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த குவித்தோவா 7-5, 5-7, 6-3 என்ற கணக்கில் 2 மணி, 42 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் லெசியா சுரென்கோவை (உக்ரைன்) எளிதாக வீழ்த்தினார். மேடிசன் கீஸ் (அமெரிக்கா) – அரினா சபலென்கா (பெலாரஸ்) இடையே நடந்த கால் இறுதியில், சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ் தனது கால் இறுதியில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரஇன்) வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் ஹாலெப் – சபலென்கா, குவித்தோவா – பெர்டன்ஸ் மோத உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தினார். ஸ்பெயினின் பாப்லோ கரினோ புஸ்டா தனது கால் இறுதியில் 6-7 (7-9), 4-6 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் போராடி தோற்றார். பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் 7-6 (7-5), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் அர்ஜென்டினா வீரர் ஜுவன் மார்டின் டெல்போட்ரோவை வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-7 (2-7), 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் சக வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் – மரின் சிலிச், பெடரர் – காபின் மோதுகின்றனர்.