கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு இவரை நிச்சயமாக தெரிந்திருக்கும். ஏனெனில் இவர் செய்த சாதனையை இன்றளவும் எந்தவொரு பேட்ஸ்மேனாலும் செய்ய முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆம் டெஸ்ட் நாயகன், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ‘டான்’ என அனைவராலும் அழைக்கப்படும் டான் பிராட்மேன் பற்றி தான் நாம் அறிய இருக்கிறோம்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ்ஸில் உள்ள கூட்டாமுன்றாவில் ஓர் எளிய குடும்பத்தில் 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தார்.
இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட பிராட்மேன் பிற்காலத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த வீரராகவும் திகழ்ந்தார்.
இவர் தனது சிறு வயதில் ஸ்டெம்புகளை வைத்து கோல்ப் பந்துகளை அடித்து பயிற்சி மேற்கொண்டார். இது போன்று அவர் கையாண்ட பல வித்தியாசமான கிரிக்கெட் யுக்திகள் பிராட்டின் பேட்டிங் திறமைக்கு வலு சேர்த்தது.
பிராட்மேன் 12-வது வயதில் தனது பள்ளி அணிக்காக விளையாடிய போது முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் அவர் 115 ரன்களை விளாசினார்.
பின்னர் அவர் 1922ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனது விளையாட்டிற்கு உதவி செய்த ரியல் எஸ்டெட் முகவரிடம் நேரம் கிடைத்தபோது வேலை செய்து வந்தார். அப்போது டென்னிஸ் மீது எழுந்த ஆசையால் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட்டை விட்டு டென்னிஸ் விளையாட சென்று விட்டார்.
பின்னர் மீண்டும் 1925ம் ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அவர் கிளப் அணிகளுக்காக தன் சிறப்பான ஆட்டத்தால் பல வெற்றிகளைத் தேடித் தந்தபோது ஆஸ்திரேலிய பத்திரிகைகளின் கவனம் இவர் மீது திரும்பியது.
இவர் முதன்முறையாக நவம்பர் 30, 1928ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் இவர் சோபிக்கத் தவறியதால், அப்போதைய கேப்டன் ஜாக் ரைடர், இவருக்கு அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்பளிக்கவில்லை.
அதன் பின்னர் பிராட்மேன் அடுத்தடுத்த போட்டிகளில் தனது வித்தியாசமான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். பின் தனக்கென ஆஸ்திரேலிய அணியில் ஒரு தனி இடத்தை இறுதி வரை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
ஒரு தனி அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5028 ரன்களை குவித்ததன் மூலம் செய்துள்ளார்.
அதிகமுறை முச்சதம் (2முறை) அடித்த முதல் வீரர் டான் பிராட்மேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றளவும் பேசும் சாதனையாக டான் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் மற்றும் 13 அரை சதங்கள் உட்பட 6996 ரன்களை குவித்துள்ளார். அதாவது சராசரியாக 99.94 ரன்களை குவித்துள்ளார்.
சராசரி 100 தொடுவதற்கு, இன்னும் 00.06 புள்ளிகளே (அதாவது 4 ரன்) தேவைப்பட்டன. இதனை தனது கடைசி போட்டியில் நிறைவேற்றுவார் என எதிர்பார்த்த சூழலில், அப்போட்டியில் டான் பிராட்மேட் டக் அவட் ஆகி வெளியேறினார் என்பது வரலாறு.
மேலும் இவர் டெஸ்ட் போட்டிகளில் 12 இரட்டை சதங்கள் விளாசியதன் மூலம் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார்.
இதுவரை எத்தனையோ டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வந்தாலும் இவரது இந்த சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
முதன்முறையாக 1936ல் கேப்டனாக பிராட்மேன் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பொறுப்பேற்றார். அப்போது அவர் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது.
அவர் கேப்டனாக தலைமை வகித்த முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியுற்றது. பின்னர் அதே தொடரில் அடுத்து வந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி, பிராட்மேனின் மிகச்சிறந்த ஆட்டத்தால் அந்த தொடரை வென்றது.
இரண்டாம் உலகப் போருக்கு பின் ஆஸ்திரேலியா அணியை சிறப்பாக வழிநடத்தி பல சாதனைகளை செய்ய உறுதுணையாக இருந்துள்ளார்.
பிராட்மேன் கேப்டனாக எந்தவொரு தொடரையும் இழந்ததில்லை.
இவர் 1936 முதல் 1938 வரை தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
இத்தனை சாதனைகளை புரிந்த டான் பிராட்மேன் ஆகஸ்ட் 18, 1948ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
பின்னர் இவர் ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகத்திலும், தேர்வாளராகவும், கிரிக்கெட் வர்ணனையாராகவும் (கமெண்டேட்டர்) விளங்கினார். இன்று வரையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இவரை தங்களது கிரிக்கெட் ரோல் மாடலாக வைத்துள்ளனர்.,
பிராட்மேனை பாராட்டும் விதமாக 2001ம் ஆண்டு அப்போதைய ஆஸ்திரேலியா பிரதமர் ஜான் ஹாவர்டு தபால் தலை மற்றும் நாணயங்களை வெளியிட்டார்.
பின்னர் 2008ல் அவரது நூறாவது பிறந்த நாளையொட்டி ஆஸ்திரேலியா நாணய துறை சார்பில் அவர் முகம் பதித்த 5000 தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது இணைய பக்கத்தில் பிராட்மேன் டூடுலை வைத்து இந்த நூற்றாண்டின் கிரிக்கெட் உலகின் காட்பாதருக்கு பெருமை சேர்த்துள்ளது.