கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான இதில் சாம்பியன் பட்டம் வெல்ல முன்னணி வீரர், வீராங்கனைகள் வரிந்துகட்டுகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிஸ்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் காயம் காரணமாக தடுமாறிய இவர்கள் 4 பேரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே தொடரில் களமிறங்குவது டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டொமினிக் தியம் (ஆஸ்திரியா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோரும் பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோருடன் சாதனை வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரும் கோப்பையை கைப்பற்றத் துடிக்கின்றனர்.நடால் தனது முதல் சுற்றில் சக ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரரின் சவாலை சந்திக்கிறார். ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தனது முதல் சுற்றில் ரஷ்யாவின் எவ்ஜெனியா ரோடினாவுடன் மோதுகிறார். ரஷ்ய நட்சத்திரம் மரியா ஷரபோவா, முதல் சுற்றில் சுவிஸ் வீராங்கனை பேட்டி ஷ்னைடரை எதிர்கொள்கிறார்.ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ₹26.51 கோடி வழங்கப்பட உள்ளது.