ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கவுகாத்தி அணிகள் இன்று மோதல்

நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3) தோல்வியை தழுவியது. கவுகாத்தி அணி முதல் ஆட்டத்தில் கோவாவுடன் டிரா (2-2) கண்டது. அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை (1-0) வென்றது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளும். நட்சத்திர வீரர்கள் ஜெஜெ லால்பெகுலா, மெயில்சன் ஆல்வ்ஸ், இனிகோ கால்ட்ரோன், அகஸ்டோ உள்ளிட்டோர் சாதிக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறார்கள். அதே சமயம் வெற்றிப்பயணத்தை தொடர கவுகாத்தி அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கவுகாத்தி அணி 4 முறையும், சென்னை அணி 2 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.