இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டிணம் ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றன. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர் (21 வயது) அதிரடியாக சதம் விளாசினார். கியரன் பாவெல் 51 ரன், ஹோப் 32, ரோவ்மன் பாவெல் 22, கேப்டன் ஹோல்டர் 38 ரன் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் ஷர்மா – கேப்டன் கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 246 ரன் சேர்த்து அசத்தியது. கோஹ்லி 140 ரன் விளாசி ஆட்டமிழந்தார். ரோகித் ஷர்மா 152 ரன், ராயுடு 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். ரோகித், கோஹ்லி இருவரும் பல்வேறு சாதனைகளை தகர்த்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி விசாகப்பட்டிணத்தில் இன்று நடைபெறுகிறது.இந்த நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கான 12 வீரர்கள் அடங்கிய பட்டியலில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக மணிக்கட்டு ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை குறைந்த இன்னிங்சில் (259) எட்டிய வீரர் என்ற சாதனை சச்சின் வசம் உள்ளது. அதை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 81 ரன் மட்டுமே தேவை. அவர் இதுவரை 204 இன்னிங்சில் 9,919 ரன் எடுத்துள்ளார்.
அனைத்து வகையிலும் பலம் வாய்ந்த இந்திய அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதே சமயம், பதிலடி கொடுக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீசும் வரிந்துகட்டுவதால் இப்போட்டி மிகவும் சுவராசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்