இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் கடுமையாகப் போராடிய அந்த அணி 1-3 என்ற கணக்கில் அந்த தொடரையும் இழந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.
ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா 2வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 7வது இடத்திலும் உள்ளன. எனினும், டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியே ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ரோகித் ஷர்மா தலைமையில் களமிறங்குகிறது.