மழையால் 4வது போட்டி டிரா! முதல்முறையாக ஆஸி., மண்ணில் தொடரை வென்று இந்தியா அசத்தல்!

ஆஸ்திரேலியாவுடன் இந்தியா சிட்னியில் மோதிய 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடர் மழை காரணமாக டிராவில் முடிந்தது.

மழையால் 5-வது நாள் ஆட்டம் தொடங்கப்படாத நிலையில், முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி, இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. பின்னர் 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

இதை அடுத்து சிட்னியில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடினர். மயாங்க் 77, புஜாரா 193, ஜடேஜா 81, ரிஷப் பந்த் 159* என ரன்கள் விளாசினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 300 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் எடுத்தார். 322 ரன் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் பெற்று 4ம் நாள் முடிவில் 2 வது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 6 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 5 வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப் பட்டது.

எனவே இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கைப்பற்றும் முதல் டெஸ்ட் தொடர் என்பதும், கோலியின் தலைமையில் பெற்ற வெற்றி என்பதும் கொண்டாடத் தக்க அம்சங்கள்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் புஜாரா பெற்றார்.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி 31 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாலோ ஆன் பெற்றது இந்தப் போட்டியில் குறிப்பிடத் தக்க அம்சம்.

முன்னதாக இதே சிட்னி மைதானத்தில்தான் 1988ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் பெற்றது. அதன் பின்னர் தற்போது கோலி தலைமையிலான இந்திய அணியிடம் ஃபாலோ ஆன் பெற்றது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...