
செலவுக்கு பணம் தர மறுத்த, தாயை கத்தியை எடுத்து நெஞ்சு, வயிறு பகுதிகளில் குத்தி கொலை செய்துள்ளார் மகன்!
திருப்பூர் மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி. வயது 45 ஆகிறது. 2 மகள்களும், 22 வயதில் அர்ஜீத் என்ற மகனும் உள்ளனர்.
ஒரு மகளுக்கு கல்யாணமாகிவிட்டது. இன்னொரு மகள், கோவையில் தங்கி ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவனை இழந்த ஆரோக்கியமேரி, மகன் அர்ஜீத்துடன் தங்கி வருகிறார்.
அர்ஜீத் எந்த வேலைக்கும் செல்வதில்லை. ஆரோக்கியமேரி கணவரின் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார். அதனால் அடிக்கடி அம்மாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்றுகூட வழக்கம்போல, செலவுக்கு பணம் கேட்டதற்கு, ஆரோக்கியமேரி பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜீத், கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து வந்து குத்தி விடுவேன் என்று சொல்லி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியான ஆரோக்கியமேரி, கோவையில் உள்ள மகளுக்கு போன் செய்து, அர்ஜீத் தன்னை கத்தியை எடுத்து குத்தி விடுவதாக மிரட்டுகிறார் என்று சொல்லி அழுதுள்ளார்.
இதனால் இன்னும் ஆவேசம் அடைந்த அர்ஜீத், ஆரோக்கிய மேரியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டார். வயிறு மற்றும் நெஞ்சில் கத்தி குத்துப்பட்ட நிலையில், வலியால் அலறி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார் ஆரோக்கியமேரி.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அர்ஜீத் யாராவது என்கிட்ட வந்தால், வீட்டு மாடியில் இருந்து குதித்துவிடுவேன் என்று சொல்லி 2-வது மாடி பால்கனியில் போய் நின்று கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் ஊரக காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டதும், விரைந்து வந்து, ஆரோக்கிய மேரியின் உடலை மீட்டதுடன், அர்ஜீத்தையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அர்ஜீத் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதனால்தான் வேலைக்கு செல்லாமல் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து, ஆத்திரத்தில் கொலையும் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.