இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம், பரம்பி குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு பிரச்சனை இருந்து வருகிறது.
இரு மாநிலங்களுக்கிடையே நடந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
அப்போது இரு மாநில தண்ணீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக முதல்- அமைச்சர் மற்றும் கேரள முதல்-மந்திரி இருவரும் கடந்த 26-ந்தேதி சந்திப்பதாக கூறப்பட்டது. 26-ந்தேதி தனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் இந்த தேதியை மாற்றி வைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாலை 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இரு மாநில முதல்-மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தம் குறித்து பேசப்பட உள்ளது. பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் 1970-ல் போடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.
எனவே எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் இருவரும் சந்தித்து பேசும்போது இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து ஏற்கனவே கேரள மந்திரி கிருஷ்ணன் குட்டியை தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.
அப்போது இரு மாநிலங்கள் இடையிலான நதி நீர் பங்கீடு மற்றும் தண்ணீர் பிரச்சனை குறித்து சுமூக உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில்தான் அடுத்த கட்டமாக இரு மாநில முதல்-மந்திரிகளும் சந்தித்து பேச உள்ளனர்.