ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாயாகுளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளில் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
தங்கள் தெருவின் பெயர் புதுமாயாகுளம் என்றிருக்க வேண்டும் அதற்குப் பதிலாக அருந்ததியர் காலனி என்று அச்சாகி வந்துள்ளதால் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
இரண்டு பூத்களிலும் தலா 950, 730 வாக்குகள் உள்ள நிலையில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே தெருப் பெயர் மாற்றத்தைச் சுட்டிக்காட்டி சர்ச்சையில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடி முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தாசில்தார் வீரராஜ், பிடிஓ தங்கபாண்டியன், சார் ஆட்சியர் சுஹோபத்ரா ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வாக்குச்சீட்டில் தெருப்பெயரை மாற்றி அச்சிட்டுத் தருவதாகக் கூட சமாதானப்படுத்தினர்.
ஆனால், வாக்காளர்களோ அரசு ஆவணத்திலேயே தங்கள் தெருவின் பெயரைத் திருத்திக் கொடுத்தால் தான் வாக்களிப்போம் எனக் கூறி தேர்தலைப் புறக்கணித்தனர். சுமார் 1 மணி நேரம் வாக்குச்சாவடி முன் அமர்ந்திருந்துவிட்டு பின்னர் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பினர்.