
திருப்பூர் மாவட்டத்தில் சமீபகாலமாகவே குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் கத்தி,கபடா போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மங்கலம் அடுத்துள்ள இந்தியன் நகர் பகுதியில் பத்திற்கும் மேற்பட்டோர் கூட்டமாக பேசி கொண்டிருக்கும் போது, கூட்டத்திலிருந்த ஒரு நபர் திடீரென கத்தியை எடுத்து இன்னொரு நபரை குத்த முயற்சிக்கிறார். இந்த சம்பவத்தில் அந்த நபருக்கு லேசாக கத்தி குத்து விழுகிறது.
பின்னர், சுதாரித்துக்கொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட, அவரை குத்த முயன்ற இளைஞர்களும் கூடவே பின் தொடர்கின்றனர். இந்த காட்சியானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும், என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.