spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்விநாயகர் சிலைகள் தயாரிப்பாளர்கள் சார்பில்... மாநில அரசின் ‘சதுர்த்தி விழா தடை’க்கு எதிராக வழக்கு!

விநாயகர் சிலைகள் தயாரிப்பாளர்கள் சார்பில்… மாநில அரசின் ‘சதுர்த்தி விழா தடை’க்கு எதிராக வழக்கு!

- Advertisement -
vinayakar1
vinayakar1

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக, கொரோனா என்பதைக் காரணம் காட்டி, வேண்டுமென்றே பொதுமுடக்கத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக., அரசு, ஆயிரக்கணக்கான ஏழை மண்பாண்டத் தொழிலாளர்கள், மண் பொம்மைகள் தயாரிப்பவர்கள், விநாயகர் சிலைகளைத் தயாரிப்பவர்களின் வயிற்றில் அடித்துள்ளது.

விநாயகர் சிலைகள் பொது இடங்களில் நிறுவப் படக் கூடாது என்று குறிப்பிட்டு, சதுர்த்தி விழா கொண்டாடுவதை தடை செய்துள்ளது மாநில அரசு. இதனால் பெரிதும் பாதிகப் பட்டவர்கள் மண் பொம்மைகள், சிலைகளைச் செய்யும் தொழிலாளர்கள்தான்!

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரையில் விநாயக சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி அளிப்பது போல் பாவ்லா காட்டி, ஒவ்வொரு தரப்பிடமும் கூட்டங்களைப் போட்டு, அதன் மூலம் எப்படியும் சதுர்த்தி விழா நடைபெறும் என்ற நம்பிக்கையை விழா ஏற்பாட்டாளர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் ஏற்படுத்தி வந்த மாநில அரசு, திடீரென்று, இப்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை என்று அறிவித்துள்ளது.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு வருடம் முழுதும், கடன் வாங்கி வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சிலைகள், பொம்மைகள் செய்து சதுர்த்தி விழாவையும் நவராத்திரியையும் முன்னிட்டே அந்த சிலைகள் பொம்மைகளை விற்று, அடுத்த ஒரு வருடத்துக்கான தங்கள் வாழ்க்கைச் செலவுகளை தேற்றுவர் இந்த கைவினைக் கலைஞர்கள்.

vinayakar3
vinayakar3

இந்த நிலையில் இவ்வாறு விழாவை முடக்குவதன் மூலம் இம்மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது, அரசுக்கு அம்மக்கள் மீது இருக்கும் அக்கறையின்மை என்பதும் பாராமுகம் என்பதுமே காரணம் என்கின்றனர். இந்த சிலைகள் செய்வதற்காக மண் எடுத்தலில் இருந்து, அச்சு வார்ப்பதில் தொடங்கி, இயற்கை சாயம் தயார் செய்து அதை மாதக்கணக்கில் வைத்திருந்து, பிறகே சிலைகளுக்கு தயார் செய்ய முடியும், இந்த வருடம் அரசின் அக்கறையற்ற செயலால், அனைத்தும் வீணாகி, இதற்காக வாங்கிய கடன்கள் கழுத்தை நெரிக்க, கைவினைக் கலைஞர்களை கடும் நெருக்கடியில் தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் அம்மக்கள்.

இத்தகைய சூழலில், தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், வழக்குரைஞர் அஸ்வத்தாமன் ஆன்லைன் வழியே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இவ்வாறான விவரங்களைக் குறிப்பிட்டு, அரசின் உத்தரவுக்கு தடை கோரியும், சூழலைக் கருதி நிபந்தனைகளின் அடிப்படையில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதிக்குமாறும் கோரியுள்ளார்

aswathaman
aswathaman

இந்த வழக்கு குறித்து அஸ்வத்தாமன் நம்மிடம் தெரிவித்தவை…

முதலில் விநாயகர் சிலைகளை வைப்பதால் மக்கள் கூட்டம் ஏற்பட்டு அதன் மூலம் பரவும் என்று சொல்லப்படுவது தவறானது. காரணம் ஒரு இடத்தில் விநாயகர் சிலை வைத்தால் அதை அந்தப் பகுதி மக்கள் மட்டுமே வந்து வணங்கி விட்டு செல்வார்கள். அவர்களும் கூட்டமாக வந்து வணங்குவது கிடையாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தனித்தனியாக வந்து வணங்கி விட்டுச் சென்று வருகின்றனர்.

அடுத்து ஏற்கெனவே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய ஊர்வலமாகச் செல்ல போவது இல்லை என்று தமிழக அரசிடம் இந்து முன்னணி அமைப்பு தெளிவாகச் சொல்லிவிட்டது.

இப்படி இருக்கும் போது தேவையில்லாமல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன?

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை தடுப்பதற்கான முயற்சிகளை 2018 ஆம் ஆண்டிலிருந்தே செய்கிறது மாநில அரசு.

சாத்தியமில்லாத ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்து G.O. 598, Public Department , dated 09.08.2018 என்ற அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணைப்படி ஒருவரும் இங்கு பிள்ளையார் சிலை வைக்க முடியாது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடர்ந்து சில தளர்வுகளை பெற்றோம்.

அடுத்த ஆண்டு 2019, அந்த தளர்வுகள் தொடர்ந்தாலும், புதிய பிள்ளையார் சிலைகளுக்கு அனுமதி இல்லை என்றார்கள். இப்போது , “கொரானா” ஒரு சாக்கு ஆகிவிட்டது. மொத்தமாக விநாயகர் சதுர்த்தியே கொண்டாடக் கூடாது என்று சொல்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் வைத்து கொண்டாடலாம், பொது வெளியில் கொண்டாடத் தான் தடை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

முதலில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் அவர்கள் வீடுகளில் கொண்டாடுவதற்கும் அரசு அனுமதி அளிப்பதற்கும் என்ன சம்பந்தம்? அரசு சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் மக்கள் வீடுகளில் விநாயகரை வணங்கத் தான் போகிறார்கள்.

ஒருவேளை வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதையும் தாங்களே கட்டுப்படுத்தலாம் என்று அரசு எண்ணுகிறதா?! அதனால்தான் தாங்கள் அனுமதி அளிப்பது போல், வீடுகளில் கொண்டாடத் தடை இல்லை என்று சொல்கிறதா?

பொதுவெளியில் கொண்டாடுவதற்கு தான் அரசு அனுமதி தேவை. அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது விநாயகர் சதுர்த்தி விழாவினை மொத்தமாக அரசு தடை செய்ததாகத் தான் பொருள்.

ரம்ஜானுக்கு 5000 கிலோ மெட்ரிக் டன் அரிசி , பனிமயா மாதா கோவில் திருவிழாவுக்கு கேட்காமலே அனுமதி , ஈஸ்டர் பண்டிகைக்காக பேக்கரிகள் திறப்பு என இந்த கொரானா காலத்திலும் ‘சிறுபான்மை’க்கு வாரி வழங்கும் மாநில அரசு, இந்துக்கள் என்றால் மட்டும் வஞ்சிக்கிறது. என்று தணியும் இந்த இந்துக்கள் மீதான வன்மம் ?

இத்தகைய பின்னணியில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் “தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நலசங்கம்” சார்பாக வழக்கு தொடுத்திருப்பதாகக் கூறுகிறார் அஸ்வத்தான். இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe