தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் முல்லைபெரியாறு வைகை, பாபநாசம் உட்பட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 116.67 அடியாக உள்ளதால் இன்று117அடியை எட்டும் நிலையில் மேட்டூர் அணை உள்ளது.இதனால் குறுவை சாகுபடிக்காக, மே 24ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடை மடை வரை நீர் செல்ல ஏதுவாக, முதல்முறையாக முன்கூட்டியே அணை மே மாதத்தில் திறக்கப்படுகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த சாரல் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழாக இருந்த நிலையில் தொடர்மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று அந்த அணையின் நீர்மட்டம் 62.75 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1370.74 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 353.50 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 79.40 அடியாகவும், 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.60 அடியாகவும் உள்ளது.
இதுபோல் கடனாநதி அணையின் நீர்மட்டம் 39 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 47 அடியாகவும் உள்ளது. இந்த 2 அணைகளிலும் நீர்மட்டம் தலா ஒரு அடி உயர்ந்து உள்ளது. மிக சிறிய அணையான 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் 18 அடியாக உள்ளது.அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 52 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கோடை மழை கைகொடுத்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று 777 கன அடி நீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1319 கன அடி நீர் வருகிறது.அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வழக்கமாக பாசனத்துக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருவதால் திட்டமிட்டபடி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் நிலங்களை உழுது பண்படுத்தி வருகின்றனர்.மேலும் நாற்றங்கால் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். அணையின் நீர் மட்டம் 131.35 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 66.98 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 5 மாவட்ட விவசாய நிலங்கள் வைகை அணை மூலம் பாசன வசதி பெறுகிறது. மழை தொடரும் பட்சத்தில் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 99.87 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.3, தேக்கடி 4.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.



