மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக தமிழகத்தில் 9 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே கோழி கடையில் வேலை பார்த்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த குற்றவாளியை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கடந்த மே 28-ம் தேதி இரவு கைது செய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்துள்ளனர். மேலும், இவர்கள் கோவையைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களை சிலரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்ததற்காகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதற்காகவும் இவர்கள் 7 பேரும் 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்ற நபர் ஜாமீனில் வெளிவந்து, அங்கிருந்து தலைமறைவாகி மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் முகமது ஆசிக் ஆஜராகவில்லை. இதனையடுத்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த மே 28-ம் தேதி நள்ளிரவு நீடூர் சென்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை உதவியுடன் முகமது ஆசிக்கை கைது செய்து சென்னை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.