தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கானஎம்.பி.பி.எஸ். ,பி.டி.எஸ்) தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த அக்., 3ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். பின்னர், இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை சென்னையில் இன்று(அக்.,17) வெளியிட்டார்.இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம் ,
மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் துவங்குகிறது. வரும் அக்., 30ம் தேதி மாணவர்கள் சேர்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதில் தகுதி பெற்றவர்கள் நவ., 4ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். இதையடுத்து, முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி துவங்கும். 7.5% இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் 558 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.வரும்., அக்.,19ம் தேதி விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
