
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வரும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அதிக மழையை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி பருவமழை தொடங்கியது. இந்த வருடம் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் 29-ந்தேதி இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி வடகிழக்கு பருவமழை தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதி, புதுச்சேரியில் இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் காற்றில் மாற்றம் ஏற்பட்டு, கிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கியது. காற்றின் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்துள்ளது.
பருவமழைக்கான சாதகமான சூழலுடன் தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1-ந்தேதி தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள அரசு அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.
சென்னையில் முன்எச்சரிக்கையாக வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர். உணவு, சமையல் கூடம், தங்குமிடம், மழைநீர் தேங்கினால் அகற்ற மோட்டார் பம்ப் செட் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
