உமையாள்புரம் டாக்டர் சிவராமன்…: கடந்த 70 ஆண்டுகளாக ‘அசுர வாத்தியம்’ எனப்படும் மிருதங்கத்தை வாசித்து வரும் உமையாள்புரம் சிவராமன் அவர்கள் இதுவரை பெண் கலைஞர் ஒருவருக்குக் கூட பக்க வாத்தியம் வாசித்ததில்லையாம்!
இவருடைய உண்மையான பெயர் காசி விஸ்வநாத சிவராமன். இவர் டிசம்பர் 17ம் தேதி, 1935ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள உமையாள்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மருத்துவர் பி. காசிவிஸ்வநாத ஐயர். இவருடைய தாயார் கமலாம்பாள்.
இசை மீது அவர் கொண்டிருந்த தீராத அதீத பற்றினால் 10 வயதில் அரங்கேற்றம்.அறுபதி நடேச ஐயர், தஞ்சை வைத்தியநாத ஐயர், பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் மற்றும் கும்பகோணம் ரங்கு ஐயங்கார் ஆகிய நான்கு குருக்களிடம் கர்நாடக மிருதங்கக் கலையை பதினைந்து ஆண்டுகள் முறையாக கற்றுக் கொண்டார்.
இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்றார்.மிருதங்க வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளைப் புகுத்தியவர். பல கர்நாடக இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். வட இந்திய இசைக்கலைஞர்களுடன் ஜுகல்பந்தி என்ற நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார்.
தனக்கு மிருதங்கம் செய்து கொடுக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த ஜான்சனின் மகன் அருண் குமரேஷுக்கு இவர் மிருதங்க வாசிப்பை கற்றுக் கொடுத்திருக்கிறார். சங்கீதத்துக்கு சாதி வேற்றுமை கிடையாது என்பது அவரின் கூற்று!
உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கு 1988ம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.1992ம் ஆண்டிற்கான மிருதங்க வாத்தியத்திற்காக சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.
தமிழகத்தின் இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.1981ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் தமிழக அரசின் ‘மாநிலக் கலைஞராக’ பணியாற்றியுள்ளார்.
2003ம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்ம பூஷன் விருதும், 2010-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார்.2011 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகடமியின் மிக உயர்ந்த விருதான அகாடமி ரத்னா விருது பெற்றுள்ளார்.முதன் முதலாக இழைக்கண்ணாடியால் உருவாக்கப்பட்ட மிருதங்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவர், டி. ராமசாமி மற்றும் எம்.டி.நரேஷ் ஆகியோருடன் இணைந்து ‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
இவரைப் பற்றி திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் பிரக்ருதி அறக்கட்டளையோடு இணைந்து ‘ஓவர்டோன்’ டாக்குமென்ட்ரி ஒன்றை எடுத்திருக்கிறார்.. கர்நாடக இசை உலகின் மகத்தான ஆளுமைக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறது காந்தி கிராம் பல்கலைக்கழகம்!
டாக்டர் உமையாள்புரம் சிவராமன் அவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி! தலை சிறந்த மிருதங்க வித்வான் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!