மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் நம்பரையும் சேர்த்து இணைத்தால்தான், மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற அறிவிப்பு வெளியானது.
ஆன்லைன் மூலம் மின் கட்டணம் கட்டும் நுகர்வோர்களுக்கு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டனர். பலர் மின் கட்டணம் கட்ட முடியாமல் தவித்தனர்.
ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக மின் வாரியம் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்ததோடு, தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தவும் உத்தரவிட்டது. இண்டர் நெட் மையங்களில், ஆதார் நம்பரை இணைப்பதற்கான பணிகள் செய்து தரப்படுகிறது. பொதுமக்கள், அங்கு சென்று இணைக்க தொடங்கினார்கள்.
அதேபோன்று, வெப்சைட்கள் மூலமாகவும் நம்பரை இணைத்து விட முடிகிறது. ஆதார் எண்ணை இணைத்தவுடன், அந்தந்த போன்களுக்கு மெசேஜ் வந்துவிடும். நம்பரை இணைப்பது எளிது என்றாலும், பல பேரால் அந்த பணியை எளிதாக செய்ய முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்தது. இந்த சிறப்பு முகாம் அனைத்தும் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. டிசம்பர் 31ம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அதுவரை மின் பயனீட்டாளர்கள் ஏற்கனவே உள்ள நடைமுறைபடியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று தொடங்கியுள்ள சிறப்பு முகாம்கள், தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படுகிறது. இன்று காலை தொடங்கிய சிறப்பு முகாம்களில், பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்து வருகின்றனர். மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.