
ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதல்முறையாக தமிழகம் மதுரை கோவை நீலகிரி வரும் ஜனாதிபதிக்கு ஐந்து அடுக்குடன் கூடிய பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி பிரதமர் என பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் சிவராத்திரியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதற்காக வருகிற 18-ந் தேதி காலை புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், பின்னர் கார் மூலம் பகல் 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
பின்னர் மீண்டும் விமானம் மூலம் மதுரையில் இருந்து கோவை வருகிறார். அங்கு ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து மறுநாள் பிப் 19-காலை 9 மணி அளவில் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகிறார். அப்போது ராணுவ பயிற்சி அதிகாரிகள் மத்தியில் அவர் பேசுகிறார்.
இதன் பின்னர் மதியம் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் நீலகிரிக்கு முதல்முறையாக வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் தயார் நிலையில் இருக்குமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மதுரை கோவை நீலகிரி மாவட்டத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் நேற்று முதல் ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.