
தர்மபுரி பென்னாகரம் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை போலீசார் பார்வையிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள நாகதாசம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ராக்கெட், வானவெடி உள்பட பல பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசுகளை தயார் செய்து விற்பனைக்காக குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை அந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த பூபதி மனைவி பழனியம்மாள் (50), காவேரி மனைவி முனியம்மாள் (65), சிவாலிங்கம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பட்டாசு குடோனில் இருந்து புகை வந்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் உள்ள வீடுகள் குலுங்கின.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் வெடித்து சிதறியது தெரியவந்தது.
இதில் பணியாற்றி பெண்கள் முனியம்மாள், பழனியம்மாள் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிவாலிங்கம் என்ற பெண் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் விபத்தில் இறந்த 2 பெண்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.