சென்னை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்குத் தொடர்ந்தார். இதில் தமிழக அரசு அவரது மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறி, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு எதிராக நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார். இந்த மனு, நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை அடையாறில் உள்ள ஆந்திர சபா அருகே சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்பட உள்ளதாகவும், இந்தப் பணி 2017க்குள் முடிந்ததும் இந்தச் சிலை அங்கு மாற்றப்படும் எனவும் அரசு வழக்குரைஞர் பதில் அளித்தார் .
அப்போது, இந்த மணி மண்டபம் கட்ட ஏன் இரண்டு ஆண்டுகள் தேவை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.