ஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்? உண்மை வெளிவருமா?

இந்தச் சம்பவத்தில் ஏதோ ஒரு பின்னணியை மறைக்கவே முயலுகிறார்கள் என்பது மட்டும் இணை ஆணையரின் அறிக்கையில் இருந்து வெளிப்படுவதை நம்மால் மறைக்கவும் இயலவில்லை.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள், செருப்பு மற்றும் கத்தியுடன் உள்ளே நுழைந்த சமூக விரோத கும்பலில் ஒருவன் கருவறை அருகே சென்று, அங்கே இருந்த கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை எடுத்து கருவறைக்குள் எறிந்துள்ளான். சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் பிடித்ததும் அவனுடன் வந்த மற்ற சமூக விரோத கும்பல் தப்பி ஓடியுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டியவனைப் பிடித்து, காவலர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவன் பெயர் தர்மராஜ் என்றும், கொத்தனாராக வேலை செய்து வருவதாகவும், திருவிடைமருதூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனக்கு காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாத விரக்தியில் இவ்வாறு செய்து விட்டதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வின் பின்னர், ஸ்ரீரங்கம் கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான பொ.ஜெயராமன் இன்று நடைபெற்ற சம்பவம் குறித்துக் குறிப்பிட்டு, பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி ஒரு ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் அவர் இந்தச் சம்பவம் குறித்து குறிப்பிட்டதில், தரிசனத்துக்கு வந்த நபர் ஒருவர், பெருமாள் சந்நிதி முன் அழுக்குப் பை ஒன்றைப் போட்டதாகவும், அதை காவலர்கள் எடுத்து வந்து புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் இவர் குறிப்பிட்டுள்ளது…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள் மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று 24.05.2018 காலை சுமார் 10.30 மணி அளவில் பக்தர்கள் கியூ வரிசையில் வந்து தரிசனம் செய்து கொண்டிருந்த போது, கியூ வரிசையில் தோளில் பையுடன் வந்த வாலிபர் ஒருவர் மூலவர் பெரிய பெருமாள் சந்நிதி முன்புறம் உள்ள குலசேகரன் படியில் தனது தோளில் இருந்த பையினைப் போட்டு விட்டார். உடனடியாக அங்கிருந்த திருக்கோயில் பணியாளர்கள் அந்த நபரை திருக்கோயிலுக்கு வெளியே அழைத்து வந்து, அவர் வைத்திருந்த பையினை சோதித்தபோது, அவரது பையில் அழுக்கு துணிகள், சிறிய கத்தி, ஒரு சிறிய கத்திரிக்கோல் ஆகியவை இருந்ததால் மேற்படி நபர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும். திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கைப்பைகளை சோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் மூன்று நுழைவு வாயில்களிலும் தீவிர கண்காணிப்பு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர கேட்டுக் கொள்ளப் படுகிறது. – என்று கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

காலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், இளைஞர் ஒருவர் பையுடன் சென்று செருப்பை கருவறை நோக்கி வீசி எறிந்ததாகக் கூறியுள்ளனர். மேலும், கையில் வைத்திருந்த கத்தியால் கோயில் அர்ச்சகரை மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். அந்த நபர், மனநலம் குன்றிய சைகோ என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில், அழுக்குப் பையுடன் வந்த அந்த நபர் அழுக்குப் பையைப் போட்டு விட்டுச் சென்றுவிட்டதாக கோயில் இணை ஆணையர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையின் படி பார்த்தால், சில ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அழுக்குப் பையைப் போட்டுச் சென்றதற்காக ஒருவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க இயலுமா? அந்த நபர் இந்த அழுக்குப் பையைச் சுமந்து கொண்டு உள்ளே வரும் வரையில் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

திருவரங்கம் கோயிலில் தெற்கு நுழைவாயிலான பிரதான வாசல், வடக்கு நுழை வாயில், கிழக்கு நுழைவாயில் மூன்றிலும், மெட்டல் டிடெக்டர் என்று ஒன்று இருக்கும். மூன்றிலுமே பாதுகாவலர்கள், காவல்துறை நபர், சோதனை செய்வதற்கான பயிற்சி பெற்ற ஒருவர் என அமர்ந்திருப்பது வழக்கம். சாதாரணமாக பக்தர்கள் சென்றாலே சோதித்துவிட்டு அனுப்புபவர்கள், அழுக்குப் பையுடன் சைகோ போன்று இருப்பவரை எப்படி கருவறை வரை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்?

துவக்கத்திலேயே சோதனை செய்து, சந்தேகம் வந்து பேசும் போது சைகோவா இல்லையா என்பது தெரிந்திருக்குமே. அதைக்கூடவா செய்யாமல் பாதுகாவலர்கள் இருந்தார்கள்?

இப்போது, தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரக் கோரும் கோயில் இணை ஆணையர், இத்தனை நாட்கள் இந்த மெட்டல் டிடெக்டர்கள், காவலர்களை எல்லாம் வைத்து, கோயிலைப் பாதுகாப்புடன் வைத்திருப்பதாக பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தாரா என்ற கேள்விகள் நம் மனத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இந்தச் சம்பவத்தில் ஏதோ ஒரு பின்னணியை மறைக்கவே முயலுகிறார்கள் என்பது மட்டும் இணை ஆணையரின் அறிக்கையில் இருந்து வெளிப்படுவதை நம்மால் மறைக்கவும் இயலவில்லை.