தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!

நம்மாழ்வார், வட கலை, தென்கலை என்ற இருபிரிவினருக்கும் பொதுவானவர்தான். எனவே, இந்த விஷயத்தில் மேலும் பிரச்னை பெரிதாகாமல் சமயப் பெரியோர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாம் நாள் உத்ஸவத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறால் பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

நேற்று வைகாசி விசாக நம்மாழ்வார் சாத்துமுறை திருவிழாவும், பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாள் உத்ஸவமும் ஒன்று போல் வந்தது. இப்படி பல முறைகள் வந்திருக்கிறது. சென்ற வருடமும் இது போல் வைகாசி விசாக நம்மாழ்வாழ்வார் சாத்துமுறை, பிரம்மோத்ஸவத்தின் ஒருநாளில் வந்து சுமுகமாக நடைபெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடம், நேரமின்மையை திடீரென புகுத்தி, தேவையற்ற பிரச்னைகளை கோயில் வடகலை அர்ச்சகர்கள் செய்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இன்னொரு பிரிவான தென்கலை வைணவர்கள். அதற்குக் காரணம், நம்மாழ்வார் சாத்துமுறையை அந்த இடத்தில் வைத்து நடத்துவதற்கு குறிப்பிட்ட வடகலைப் பிரிவில் சிலர் விரும்பாததே காரணம் என்று புகார் கூறுகின்றார்கள்.

நம்மாழ்வார் வைணவ மரபின் ஆணி வேராகத் திகழ்ந்தவர். வேளாள குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வார் இயற்றிய தமிழ் வேதங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவைதான் வைணவ மரபுக்கே அடிப்படையாகத் திகழ்கின்றன. வைணவர்கள் போற்றிக் கொண்டாடும் தமிழ் மறைகள் என, வடமொழியில் திகழும் நான்கு வேதங்களின் சாராம்சத்தை தமிழில் அளித்தவர் நம்மாழ்வார். ஆழ்வார்களின் தலையாயவர் என்றும், தமிழ் மறைகளாகப் போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உலகுக்கு மீண்டும் அளித்தவர் என்றும் போற்றும் நம்மாழ்வாரின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத் திருநாள், அனைத்து வைணவ ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் பிற் காலத்தில் வடகலை வைணவப் பிரிவினரின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், ஆலயத்தின் பல சந்நிதிகள் வடகலை திருமண் காப்புடன் மாற்றம் பெற்றன. ஆயினும் நம்மாழ்வார் சந்நிதி உள்ளிட்ட ஒரு சில சந்நிதிகளில் இன்றும் தென்கலை திருமண் காப்புடன் பாரம்பரிய உத்ஸவங்கள், முறை மாறாமல் வழிவழியாக நடத்தப் பெற்று வருகின்றன.

ஆனால், நேற்று திடீரென நிகழ்ந்த ஒரு நிகழ்வு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழ் வேத பிரபந்தங்கள் ஓதப்பட்டு முடிக்கப்படாத நிலையில், வடகலை பிரிவைச் சேர்ந்த சிலர் உள்ளே புகுந்து கலாட்டா செய்து, அடிதடி ரகளையில் ஈடுபட்டு, ஆபாசச் சொற்களைப் பேசி, பெருமாளை துணீயைப் போட்டு மூடி, ஏதோ போல் எடுத்துச் சென்றுள்ளனர். இதை அடுத்து, பலரும் தங்கள் அதிருப்தியை கோயில் செயல் அலுவலர், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோருக்கு புகார்களாக எழுதியுள்ளனர்.

ராமானுஜ சாம்ராஜ்ய சபா அமைப்பின் சார்பில் அனுப்பப் பட்டுள்ள புகாரில், 29-5-2018 அன்று நடந்த நிகழ்வுகள் கோடானு கோடி ஸ்ரீவைஷ்னவ பகவத் பாகவதர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

நம்மாழ்வாரையும் வேளாள குலத்தையும் இழிவு படுத்தும் விதமாக, சிலர் பேசியதும், நம்மாழ்வார் சாத்துமுறை நடத்த விடமாட்டோம் என்று, நம்மாழ்வார் சாத்துமுறையை செய்யவிடாமலும், தமிழ் வேதமான திவ்ய பிரபந்தம் சேவிக்க விடாமலும் தடுத்து, சாத்துமுறை தீர்த்தத்தை கொட்டி எங்கள் வேளாளர் இனத்தையே கேவலப் படுத்தி உள்ளார்கள். எனவே “நம்மாழ்வார் சாத்துமுறையை நடத்தி சாத்துமுறை தீர்த்தம் சடாரி, நம்மாழ்வார் மரியாதையும் நடத்த வேண்டும்.

தவறும் பட்சத்தில் நாங்கள் வேளாளர் குல மக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்… – என்று கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் கையெழுத்திட்டு புகார் அனுப்பியிருந்தார்.

சூரிய பிரபை புறப்பாடுக்கும் கருட சேவைக்கும் நடுவே இடைப்பட்ட நேரத்தில், பெருமாள் இந்த நம்மாழ்வார் சாத்துமுறை உத்ஸவத்தில் வந்து நம்மாழ்வார் மரியாதைகளைப் பெற்றுக் கொள்கிறார். இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் மரபு சார் விழா. இந்நிலையில், இந்த உத்ஸவத்தில் ஏற்படுத்தப் பட்ட குளறுபடிகளும் பிரச்னைகளும் குறித்து, நாம் விசாரித்தபோது, அங்கிருந்தவர்கள் கூறியவை…

பொதுவாக சூரிய பிரபை புறப்பாட்டுக்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். அதன் பின்னர், உத்ஸவப் பெருமாள் மீண்டும் தன் சந்நிதிக்கு விரைவாகவே திரும்பி விடுவார். மே 28ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4.45க்கு சூரிய பிரபை புறப்பாடு தொடங்கியது. எனவே, இரவு 9 மணிக்குள் பெருமாள் தன் சந்நிதிக்கு திரும்பி விடுவார் என்றும், 9.30க்கெல்லாம் நம்மாழ்வார் சாத்துமுறைக்காக நம்மாழ்வார் சந்நிதிக்கு வந்து விடுவார் என்றும் எதிர்பார்த்தோம்.

ஆனால் வேண்டுமென்றே ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அன்று வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள் 10 மணிக்குதான் பெருமாளை சந்நிதிக்கு எழுந்தருளச் செய்தார்கள். ஆனால் அதன் பின்னரும் அரை மணி நேரத்துக்கு வேதச் சாற்று என்பதை இழுத்தார்கள். அதன் பின்னர் பெருமாள், நம்மாழ்வார் சந்நிதிக்கு எழுந்தருளும் போது மணி 11 ஆகிவிட்டது.

நம்மாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியதால்தான் பெருமாள் கோயிலுக்கு இவ்வளவு பெருமை. அதனால்தான் அது திவ்ய தேசம் எனும் அந்தஸ்தைப் பெற்று பக்தர்களால் பெரிதும் கொண்டாடப் படுகிறது. அப்படிப்பட்ட நம்மாழ்வார் சந்நிதியில் மரியாதை அளிப்பதும் பூஜைகள் செய்த பின் பெறப்படும் தீர்த்தத்தைப் பெறுவதும் மரியாதையும் கௌரவமும் நிறைந்த ஒரு நிகழ்வு.

இதில், தென்கலையார்கள் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவர்களும் வேளாளர் குலத்தினர் உள்ளிட்ட வைணவ தாசர்களும் பெருமளவில் கலந்து கொண்டு நம்மாழ்வாரின் பிரபந்தப் பாசுரங்களை, தமிழ் வேதத்தை பெருமாளே காதுபடக் கேட்பதான நம்பிக்கையில் ஓதுவார்கள். பொதுவாக 330 பாசுரங்களை, கிரமப்படி மெதுவாக சொல்லி முடிக்க இரண்டரை மணி நேரம் ஆகும். ஆனால், அன்று பெருமாள், நம்மாழ்வார் சந்நிதிக்கு வந்ததே 11 மணி என்பதால், பாசுரங்களை வேகமாக அவசர கதியில் சொல்லி முடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது.

அப்படி 330 பாசுரங்களை குறைந்த காலத்துக்குள் சொல்லியாக வேண்டும் என்ற அவசர கதியில், வேக வேகமாக அனைத்துப் பாடல்களையும் சொல்ல முயற்சி செய்தார்கள். பொதுவாக, இவ்வாறு பாசுரங்கள் சொல்லத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட நேரம் கடந்ததும், பெருமாளுக்கு திருவாராதனம் தொடங்க வெளியில் வந்து கேட்பார்கள். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், நாங்கள் திருவாராதன பூஜை செய்ய தொடங்கலாமா என்று கேட்பார்கள். அவ்வாறு கேட்டுக் கொண்டு திருவாராதனம் செய்யத் தொடங்கி, திருவாராதன பூஜை முடியும் நேரத்தில், சரியாக வெளியில் பிரபந்தப் பாசுரங்களும் ஓதப் பட்டுநிறைவை அடையும். அதன் பின் சாத்துமுறை, தீர்த்த பிரசாத விநியோகம் எல்லாம் நடக்கும். இது எந்தக் குழப்பமும் இல்லாமல் இதுநாள் வரை நடந்து வந்தது.

ஆனால், நேற்று திடீரென வடகலை பிரிவினர் வேண்டுமென்றே திருவாராதனத்தை முன்கூட்டியே தொடங்கினர். நேரமின்மையைக் காரணம் காட்டி, ஆழ்வாரின் செந்தமிழ்ப் பாசுரங்களை சொல்ல விடாமல் திட்டமிட்டு தடுத்தனர். அதுவும் ஒன்றரை மணி நேரத்தில் பாசுரங்களைச் சொல்லி முடித்து, சாத்துமுறை பாசுரங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், மேலும் 30 முதல் 40 நிமிடங்களே ஆகும் என்ற நிலையில், திடீரென உள்ளே புகுந்து, பெருமாளை சால்வை போட்டு மூடி, வாத்தியம் எதுவும் இல்லாமல் மயான அமைதியுடன் எடுத்துச் சென்றார்கள். பெருமாளுக்கு சாத்துமுறை நேரத்துக்காக வைக்கப் பட்டிருந்த தீர்த்த பாத்திரத்தில் இருந்து தீர்த்தத்தை எடுத்துக் கொட்டி விட்டு அராஜகத்தில் ஈடுபட்டார்கள்.

கருட வாகனம் காலை 4 மணிக்கு தொடங்கப்படும். அதற்கு முன்னர் அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இருந்த போதிலும், நள்ளிரவு 1.30 மணிக்கே பெருமாளை அங்கிருந்து எடுத்துச் செல்வதிலேயே குறியாக இருந்து தமிழ்ப் பாசுரங்களையும் நம்மாழ்வாரையும் அவமதித்தார்கள். இத்தனைக்கும் உத்ஸவர் மூலவருக்கு மரியாதை செய்ய 5 நிமிடங்களும், சாத்துமுறைக்கு 12 முதல் 15 நிமிடங்களும், பொது பக்தர்களுக்கு நம்மாழ்வாரின் தீர்த்த பிரசாத விநியோகம் 15 முதல் 20 நிமிடங்களும், உபயதாரர்களுக்கு மரியாதை செய்ய 3 நிமிடங்களும் மட்டுமே தேவை என்ற நிலையில், அதற்குக் கூட அனுமதிக்காமல், கோயில் நிர்வாகத்தினர் உதவியுடன் அனைவரும் சேர்ந்து நம்மாழ்வார் சந்நிதியை விட்டு பெருமாளை எடுத்துச் சென்றனர்.

இதை எல்லாம் விட மிக மோசமான அதிர்ச்சிகர சம்பவமாக, கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் மற்றும் பரிஜாரகர் ஓரிருவர், தங்கள் வேஷ்டிகளை அவிழ்த்துக் காட்டி, உங்களால முடிஞ்சதைப் பாருங்கடா என்றும், இந்த வீடியோக்களை போட்டு உங்களால என்னத்தடா கிழிக்க முடியும் என்றெல்லாம் ஒருமையில் பேசி, பூஜை செய்யும் அர்ச்சகர் இனத்துக்கே இழிவைச் சேர்த்தார்கள் என்று மனம் குமுறுகிறார்கள் பக்தர்கள்.


இந்நிலையில் முதல் நாள்தான் இவ்வாறு அராஜகம் செய்தார்கள், மறு நாளும் (செவ்வாய்க்கிழமை இன்று) வைகாசிவிசாக நட்சத்திரம் மீதம் இருப்பதால், அந்த நம்மாழ்வார் சாத்துமுறை உத்ஸவத்தை இன்றாவது நடத்த ஏற்பாடு செய்யுங்கள், இந்த ஒரு உத்ஸவம் இந்த வருடம் நடக்காமலே போய் விட்டது என்ற அவப் பெயர் இருக்கக் கூடாது என்று கோயில் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கோயில் உதவி ஆணையர், செயல் அலுவலரைத் தொடர்பு கொண்டு மன்றாடிக் கேட்டும், அவர்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல், மெத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று உள்ளம் குமுறுகின்றனர் அந்த அன்பர்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் அந்த உத்ஸவத்தின் மீதத்தை நடத்தி, நம்மாழ்வாருக்கு மரியாதை தருவதை தொடர்ந்து நடத்தி முடித்துவிடலாம் என்று எண்ணிய தமிழ் வேத மரபைச் சேர்ந்த வைணவர்களின் கோரிக்கைக்கு வடமொழி வேத பிரிவைச் சேர்ந்த வடகலை வைணவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, இந்தப் பிரச்னை, அறநிலையத்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள், ஆர்.டி.ஓ., ஆட்சியர் என்று சென்றும் கூட எதுவும் நடக்கவில்லை.

தமிழுக்கும் தமிழ் மரபுக்கும் இந்தத் தமிழ் மண்ணில் நேரும் அவமானமாகவே இந்தச் செயல் கருதப் படுகிறது. பக்தனுக்காகத்தான் கடவுளே தவிர, ஒரு குறிப்பிட்ட சிலரின் கைப் பொம்மையாக கடவுள் இருப்பதில்லை. ஆனால், வடகலை பிரிவைச் சேர்ந்த ஒரு சிலரின் அராஜகத்தால், காஞ்சி கோயிலில் சர்ச்சைகள் மேலும் மேலும் தலை எடுக்கின்றன. வருங்காலங்களில் நம்மாழ்வார் உத்ஸவம் என்ற ஒன்றையே நிறுத்தி விடுவதற்கான சூழ்ச்சி வலைகளை வடகலை வைணவர்கள் பின்னுகிறார்கள் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் மறு பிரிவினர்.

நம்மாழ்வாரின் தமிழ் வேதங்களைக் கொண்டே, வேத விளக்கங்களைக் கொண்டே ராமானுஜர் என்ற மகான் பிரம்ம சூத்திரம் உள்ளிட்ட வடமொழி நூல்களுக்கு அழகிய தமிழில் விளக்கங்களை எழுதினார். நம்மாழ்வார், வட கலை, தென்கலை என்ற இருபிரிவினருக்கும் பொதுவானவர்தான். எனவே, இந்த விஷயத்தில் மேலும் பிரச்னை பெரிதாகாமல் சமயப் பெரியோர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...