சிவாலயங்களில் அகல் விளக்குகள் ஏற்ற தடை! கொதித்துப் போயுள்ள பக்தர்கள்!

நெல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சிவாலயங்களில் அகல் விளக்கு, நெய் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்படி, சிவன் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு கொதித்துப் போயுள்ள பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சிவன் கோயில்களில் அகல் விளக்குகள் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்துள்ள அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் விரும்பினால், கோயிலில் நிர்வாகம் சார்பில் வைக்கப்படும் விளக்கில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி வழிபடலாம் என்று அறிவுறுத்தினர். இந்த நடைமுறை தூத்துக்குடி சிவன் கோயிலில் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சொல்லப் போனால், விளக்கு ஏற்றி வழிபடுதல் என்பது இந்துமதத்தில் முக்கிய அம்சம் என்றாலும், சிவாலயங்களில் விளக்கு ஏற்றுவது ஒரு சமயக் கடமையாகவே கருதுகின்றனர். இது பக்தர்களின் மத வழிபாட்டு பழக்க வழக்கங்களில் தலையிடுவது ஆகும் என்பது அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாதோ என்று கேட்கின்றனர் பக்தர்கள். கோயில் வளாகத்தில் கடைகளை வைப்பதால் தீ விபத்து ஏற்பட்டது என்றும், விளக்குகளை ஏற்றுவதால் தீவிபத்து ஏற்படவில்லை என்றும் கூறியுள்ள பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் இந்து சமய விரோதப் போக்கை கண்டித்துள்ளனர்.

சிவபெருமானுக்கு விளக்கு ஏற்றி தொண்டு புரிந்தவர் நமிநந்தியடிகள் நாயனார். இந்த நாயனார், எண்ணெய் கிடைக்காத போது தண்ணீரிலேயே விளக்கு ஏற்றினார்.

திருவாரூருக்கு தெற்கே எழு கி,மீ, தொலைவில் உள்ளது ஏமாப்பேரூர். அங்கே அந்தணர் குலத்தில் நமிநந்தி பிறந்தார். நாளும் அருகில் உள்ள திருவாரூர் சென்று புற்றிடங் கொண்ட ஈசனை வழிபட்டு வந்தார். பெருமானை விளக்கு ஏற்றி வழிபட்டால் நன்றாயிருக்கும் என நினைத்து, ஊருக்குள் சென்று நெய் கொண்டுவந்து விளக்கு எரிக்க முடியாது என்பதால் அருகிலுள்ள வீட்டில் நெய் கேட்டார். அது சமணர் வீடு ஆகையால் அந்த வீட்டின் பெரியவர் உங்கள் சிவன் கையில் நெருப்பை ஏந்தி இருக்கும்போது விளக்குக்குப் பஞ்சம் ஆகிவிட்டதா, இங்கு நெய் இல்லை என்றார். அப்படி உனக்கு விளக்கு எரிக்கத்தான் வேண்டுமென்றிருந்தால் தண்ணீர் ஊற்றி எரி என்று ஏளனம் செய்தார்.

அந்த ஏளனச் சொல் கேட்டு வருத்தமடைந்து, நமிநந்தி குளக்கரை வந்தார். அப்போது அசரீரியாய் இறைவன் சொன்னான்… அடிகளே கவலையை விடு, உன் திருவிளக்குப் பணி நிகழ நெய் தானே வேண்டும், குளத்தின் நீரை விட்டு விளக்கு எரிப்பாயாக’ என்றான்.

நமிநந்தியின் உள்ளம் மகிழ்ந்தது. குளத்தில் மூழ்கி நடுக் குளத்திலிருந்து நீர் கொண்டு விளக்கில் ஊற்றி எரித்தார். உலகம் வியக்க அது சுடர்விட்டு எரிந்தது. ஏளனம் செய்த சமணர் வெட்கப் படும்படியாக விடியும் வரை விளக்கு எரித்தார். இதைத்தான், “நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே” என நாவுக்கரசர் பாடினார்.

இப்படி பெருமானுக்கு விளக்கு எரித்தலை பாரம்பரியமாக, உயிருக்கு உயிரான நிகழ்வாக பக்தர்கள் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இன்று, அடிமடியிலேயே கைவைத்திருக்கிறது அறநிலையத்துறை. இது எப்போது சரியாகுமோ?

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...