ஒகேனக்கல்லில் வெள்ளம்: 1.40 லட்சம் கன நீர் காவிரியில்! கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன… அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால் தமிழகத்துக்கு வரும் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரியில் வெள்ளம்…
ஒகேனக்கல்லுக்கு ஆக.10 வெள்ளி காலை நிலவரப்படி வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல் அருவியில் பயணிகள் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது.

கபினி அணையில் இருந்து 80,000 கன அடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 63,000 கன அடியும் மொத்தம் 1,43222 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதை அடுத்து ஒகேனக்கல்லுக்கு வெள்ளி இன்று 8 மணி நிலவரப் படி 60 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் தண்ணீர் அளவு உயரும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு பரிசல் ஓட்டவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொது மக்களுக்குப் பாதுகாப்பு நலன் கருதி துண்டுப் பிரசுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தண்டோரா போடப்பட்டு வருவதுடன், காவல்துறை தீயணைப்புத் துறை ஊர்க் காவல் படை இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.