கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய வசதியாக அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கருதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
2019 ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கெனவே உள்ள சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள்.
இவர்கள் வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ம், பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவம் 8-ம், குறிப்பிட்ட சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை பயன்படுத்தலாம். மேலும் செப்டம்பர் 22, அக்டோபர் 6 மற்றும் 13-ஆம் தேதிகளில் சிறப்பு கிராம சபை, குடியிருப்போர் நலச் சங்க கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து இன்று அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.