தமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை!

கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பரவலாக மழை வெளுத்து வாங்குகிறது. அடுத்த  3 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள கல்யாணிபுரம், நுள்ளிமலை பொத்தை அடிவாரத்திலுள்ள ஓடையை ஆக்ரமித்து செங்கல் சூளைக்கு சாலை அமைத்து இருப்பதால், இலவச வீட்டு மனைப் பட்டா வாங்கி வீடு கட்டியிருக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், வரும் 7-ஆம் தேதி கனமழை பெய்யுமென்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பகல் மழை கொட்டித் தீர்த்த நிலையில் இரவில் கிண்டி, ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். பள்ளிகளுக்கு இன்று சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது. இருப்பினும், சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 3வது நாளாக பலத்த மழை பெய்தது. மல்லவாடி, கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, நாங்குநேரி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், தோவாளை, பூதபாண்டி உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகமளிக்கும் படகு ஏரி வெறிச்சோடி காணப்பட்டதுடன், ஏராளமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், பூங்கா செல்லும் சாலையில் மண் சுவர் இடிந்து விழுந்து, சில கடைகளும் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சாமல்பட்டி, கல்லாவி, பாரூர், சிங்காரப் பேட்டை பகுதிகளில் பரவலாக நள்ளிரவு முதல் மழை பொழிந்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காவனூர், பேராவூர், பட்டினம் காத்தான், திருப்புல்லானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமான மழை  பெய்து வருகிறது. அதிகபட்சமாக மண்டபத்தில் 46 மில்லி மீட்டரும் குறைந்த பட்சமாக கமுதியில் 1.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை 5 மணி முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் திடீரென கனமழையாக உருவெடுத்தது. ஓரிருக்கை, செவிலிமேடு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், செம்போடை, கோடியக்கரை, கரியாப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...