பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு திருச்சி சென்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் செல்ல ராசாமணி வரவேற்றார்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து, ஆட்சியர் செல்ல ராசாமணியிடம் கேட்டறிந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை புறப்பட்டுச் சென்றனர். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து காரில் சென்ற அவர்கள், மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று -தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வரும் முதல்வர் பழனிச்சாமியின் வாகனத்தை மறித்து திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர் கூடூர் பகுதி மக்கள்.

கூடூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியருடனும் அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.