பவர்பேங்னு கேட்டா… களிமண்ண பேக் செய்து கொடுக்குறானுங்க… செல்போன் ஆர்டர் பண்ணா சோப்பு அனுப்புறானுங்க..!

ஆன்லைன் வர்த்தகம் மட்டும்தான் ஏமாற்றுத் தனமா, நேரில் வாங்கினாலும் நாங்க ஏமாத்துவோமே… என்று சொல்லி ஒரு படை கிளம்பியிருக்கிறது. வர்த்தகம் எல்லாம் போலி! பணத்தை சம்பாதிக்க எத்தனை வழிகளை இவர்கள் கடைப் பிடிக்கிறார்கள்!

சபரிமலை செல்வதற்காக வந்த பக்தர்கள் கன்னியாகுமரி கடற்கரையில் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு சுற்றுலா இடத்தில் சில பொருள்களை வாங்கியுள்ளனர். அவற்றில் பவர் பேங்க் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.600 மதிப்புள்ள பவர் பேங்கை ரூ.200க்கு வாங்கலாம் என்று சொல்லி, அதனை விற்பனை செய்துள்ளனர். அதைக்கேட்டு அந்த ஐயப்ப பக்தரும் குறைந்த விலையில் இருக்கிறதே என்று எண்ணி பவர் பங்குகளை வாங்கி சென்றுள்ளார்/

சபரிமலை பயணம் முடிந்து வீட்டுக்குச் சென்று பவர் பேங்கை போட்டுப் பார்த்த போது, அது வேலை செய்யவில்லை. இதனால் அதிர்ந்த அவர், ஸ்குரூ ஏதும் கழன்று லூஸாக இருக்குமென்று எண்ணி, அதனை கழற்றிப் பார்த்துள்ளார். அப்போது, அவற்றுள் களிமண் இருந்தது தெரியவந்தது.

களிமண்ணை அந்த கூட்டுக்குள் நிரப்பி, ஒரு பழைய பேட்டரியை இணைத்து, அதில் ஒரு யுஎஸ்பி போர்ட் இணைத்து, அந்த நேரத்தில் மட்டும் பவர் சப்ளை வருவது போல் ஏமாற்றி இந்த பவர் பேங்குகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது

இதை வாங்கியவர் இதனை ஒரு வீடியோவாக பதிவிட்டு கன்னியாகுமரி செல்லும் சபரிமலை பக்தர்கள் எந்த காரணத்தை கொண்டும் கன்னியாகுமரி கடல் பகுதியில் விற்பனை செய்கின்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு 2 நிமிடம் ஓடும் ஒரு வீடியோவை வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த வைரல் வீடியோ கன்னியாகுமரி பகுதியிலும் சுற்றி சுற்றி வந்தது. இந்த வீடியோவைக் கண்ட போலீசார் அந்த நபர் குறிப்பிட்ட இடத்தில் சென்று தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது ஒரு கடையில் களிமண் பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து பொருள்களை கைப்பற்றிய போலீசார் மேலும் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்

அப்போது மேலும் பல போலியான பவர்பேங்க் கிடைத்தது. தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இவற்றை விற்பனை செய்தது யார் என்று பிளாட்பாரத்தில் விற்பனை செய்பவர்கள், சாலையோரக் கடைக்காரர்களிடம் கேட்டனர். அதன் மூலம் கிடைத்த தகவலில் கேரளா மற்றும் கர்நாடகாவில் சேர்ந்த இரு இளைஞர்கள் பிடிபட்டனர்

மேற்கொண்டு நடத்தப் பட்ட விசாரணையின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த 28 வயதான சித்திக் என்பவரையும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சபியுல்லா (30 வயது) என்பவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான போலி களிமண் மற்றும் மொபைல் போன் பேட்டரிகளை கைப்பற்றினர்

இவற்றின் மேல் பகுதியில் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலியாக அச்சிடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத் இது போன்ற போலியான பொருள்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கக்கூடாது என்று கடைக்காரர்களிடம் கண்டிப்பாக உத்தரவிட்டார்.

நேரில் சென்று வாங்கினாலே ஏமாற்றும் நிலையில், ஒருவர் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்து சோப்பினை பரிசாகப் பெற்றுள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள பென்னகரத்தில் வசிக்கும் ஹோட்டல் ஊழியரான வெற்றி சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் ஒரு பிரபல இணையதளத்தில் ரூ.8,500 மதிப்புள்ள செல்போனை ஆர்டர் செய்தார். கூரியர் மூலம் பெற தனது வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தார்.

அதன்படி நேற்று அவருக்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதனை வெற்றி திறந்து பார்த்த போது செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி வைக்கப்பட்டிருந்தது. மேலும், செல்போன் சார்ஜர் மற்றும் ஹெட்போன் ஆகியவை மட்டும் சரியாக இருந்தன. சோப்புக்கு எதுக்குடா சார்ஜரும் ஹெட்போனும் என்று விரக்தி அடைந்த வெற்றி, இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்போவதக கூரியர் கொண்டு வந்த நபரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, செல்போனுக்காக ரூ.8500 ஐ வெற்றியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அந்த நபர் சென்றுள்ளார்.

இப்படி ஆன்லைனில் ஏமாறுபவர்களும் பலர் உள்ளனர் என்பதால் தான் ஆன்லைன் வர்த்தகம் இன்னும் இந்தியாவில் சூடுபிடிக்கவில்லை என்கின்றனர் பலர்.