‘திருமண் காப்பை’ இழிவுபடுத்திய ‘விளம்பர விவசாயி’ அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி மனு!

“விளம்பர விவசாயி’ திருச்சி அய்யாக்கண்ணு உள்ளிட்ட 12 நபர்கள் மீது இந்து சமய அடையாளத்தை -திருமண் பட்டை நாமத்தை – கேலிக்குரியதாக மாற்றி போராட்டம் நடத்தி இந்து மத உணர்வை புண்படுத்திய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டது.

கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வழங்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டை நாமம் போட்டு காதில் பூ வைத்து கொண்டு ஜன.8 செவ்வாய் அன்று அரை நிர்வாண போராட்டம் நடத்தப் பட்டது.

இந்நிலையில் இந்துசமய அடையாளமான திருநாமத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் பட்டை நாமம் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப் பட்டது.

இது குறித்து நம்மிடம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் தெரிவித்தவை…

கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று சொல்லி நூதன போராட்டம் நடத்துகிறேன் பேர்வழி என்று மலிவு விளம்பர அரசியல் செய்கிறார், விளம்பர விவசாயி அய்யாக்கண்ணு. அவர் உள்ளிட்ட 12 பேர் மீது இந்து சமய நம்பிக்கைகளையும், இந்து மத அடையாளங்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கத்திலும், இந்து மதஉணர்வாளர்கள் மனது புண்படும்படியாகவும் நடந்து கொண்ட இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை புகார் மனுவை விருத்தாசலம் காவல் நிலையத்தில் அளித்தோம். போலீஸாரும், மனு ஏற்பு ரசீது வழங்கி இருக்கிறார்கள்.

விருதாச்சலத்தில் பாலக்கரை அண்ணாசிலை அருகில் கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகளை வழங்கிட கோரி காத்திருப்பு போராட்டத்தை திருச்சி “விளம்பர விவசாயி ” அய்யாக்கண்ணு மற்றும் ராஜா மாதவன், வேல்முருகன், வெங்கடேசன், சாத்துக்குடி சக்திவேல், பெரியசாமி, நீலகண்டன், கவியரசன், சுப்பிரமணியன், ஸ்டாலின், கிருஷ்ணமூர்த்தி, கலியபெருமாள், சின்னவர் ஆண்டவர் உள்ளிட்ட விவசாயிகள் பெயரில் போராட்டம் நடத்தி இந்து சமய சின்னத்தை கேலிப் பொருளாக மாற்றிய இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டி புகார் மனுவில் சமர்ப்பித்தோம் .

அய்யாக்கண்ணு தன்னை விவசாயிகளுடைய பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு விவசாயிகளை தவறான பாதைக்கு வழி நடத்துகிறார். ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது என்பது அனைவருக்கும் உள்ள உரிமை. அதே நேரத்தில் ஜனநாயக உரிமையை பின்பற்றாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தும் படியாக போராட்டம் நடத்துவதை இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது.

“இந்து மக்கள் கட்சி விவசாயிகளுக்கோ, விவசாயத்திற்கு எதிரானவர்கள் அல்ல” இவர்களுடைய நியாயமான கோரிக்கை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் வரவேண்டிய நிலுவைப் பணம் வராமல் இருப்பதற்கும் இவர்கள் நடத்தும் போராட்டத்தில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு போராடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

பெரும்பான்மை இந்துக்கள் நெற்றியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய திருநாமத்தை, திருமண்ணை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, காதிலே பூ சூடி… பார்ப்பவர்கள் நகைப்பதற்காக, வித்யாசமான போராட்டத்தை முன்னெடுத்தேன் என்று சொல்லிக் கொண்டு, இந்து மத உணர்வாளர்களையும் இந்து சமய அடையாளத்தையும் இந்து நம்பிக்கைகளையும் கொச்சைப் படுத்தியிருக்கிறார்.

உண்மையிலேயே விளம்பர அரசியல் செய்யக்கூடிய இந்த “விளம்பர விவசாயி ” திருச்சி அய்யாக்கண்ணு “தன்னை சிலுவையில் அடித்துக் கொண்டு ஏன் போராட்டம் நடத்தவில்லை! “சுன்னத் செய்து கொண்டு தொப்பி அணிந்து ஏன் போராட்டம் நடத்தவில்லை? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல இவர்களுடைய போராட்டத்திற்கு இந்து மத நம்பிக்கையும் இந்து சமயச் சின்னங்களும் தான் கிடைத்ததா? இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!

ஆகவே தமிழக அரசு இந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட இந்து சமய அடையாளங்களை கேலிக்குரியதாக மாற்றியதற்காக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு மனு கொடுத்தோம் என்றார்.

இந்த புகார் மனு கொடுத்தலின் போது, மாநில இளைஞர் அணிச் செயலாளர் என்.ஆர் பரணிதரன் ஏற்பாட்டில் இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் எம் மணிகண்டன், விருத்தாசலம் தொகுதி தலைவர் மங்கலம்பேட்டை கமலக் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் சரவணன், மங்கலம்பேட்டை நகர செயலாளர் சங்கர், நகர தலைவர் யோகேந்திரன், நகர இளைஞரணி தலைவர் கோபிநாதன் நகர இளைஞரணி துணை தலைவர் ஸ்ரீநந்தன் நகர பொறுப்பாளர் ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.