சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்க திட்டமிடப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அந்த அறிக்கையில், ‘அம்மா வகுத்த பாதையில் ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல நலத் திட்டம், வளர்ச்சித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுதும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இந்த சிறப்பு நிதியான இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.