தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, ஏரிகளில் தண்ணீர் இல்லை – 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது; குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், “தமிழகத்தில் குடிநீா்ப் பஞ்சம் மிகக் கடுமையாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சென்னை குடிநீா் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, ரெட்ஹில்ஸ் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி என அனைத்து ஏரிகளின் நீா் மட்டமும் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
கடந்த 12ஆம் தேதி நிலவரப்படி 885 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருப்பு உள்ளது. இதே காலக்கட்டத்தில் 4 ஆயிரத்து 976 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் குறைந்தது 20 மாவட்டங்களில் நிலத்தடி நீா் மிகவும் மோசமாகக் குறைந்துவிட்டதாக ஆய்வறிக்கைகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக சென்னை மாநகர மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மழை அளவு 55 சதவிகிதம் குறைந்துவிட்டதால், குடிநீருக்கு அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற பழமொழி தான் நினவுக்கு வருகிறது. 2016-17, 2017-18 மற்றும் 2018-19 நிதிநிலை அறிக்கைகளில் மட்டும் ஏறக்குறைய 15 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீா் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. ஏற்கெனவே இந்த ஆட்சியிஜ்ன் 110ன் கீழான அறிவிப்புகள், எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா அறிவிப்புகளில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஐந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த திட்டங்களின் மதிப்பு மட்டும் 9 ஆயிரத்து 692 கோடி ரூபாய். உங்களுடைய ஆட்சியில் மொத்தமாக அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீா் திட்டங்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே அரசு இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை இந்த மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதனால் மக்கள் சந்திக்கும் அவலங்களை மனதில் வைத்து வருகிற கோடைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படப்போகும் அவதியைப் புரிந்துகொண்டு ஏற்கெனவே அறிவித்த இக்குடிநீா் திட்டங்களை எல்லாம் உடனடியாகச் செயல்படுத்தும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனப் பேசினார் ஸ்டாலின்.
