உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டை புறக்கணிக்கக் கூடாது!: ராமதாஸ் கோரிக்கை!

வரும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்கள் ஏற்படவிருக்கும் நிலையில், அவற்றில் தகுதியான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்று பாமக.,நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை…

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 27 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்த போஸ், கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களின் திறமை குறித்தோ, அனுபவம் மற்றும் அப்பழுக்கற்ற தன்மை குறித்தோ யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. மாறாக, இவர்களின் சொந்த உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் பலர் ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கே உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாய்ப்பு வழங்கப்படுவதைப் பார்க்கும் போது, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இந்தியாவின் பெரிய உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி பானுமதி அவர்கள் கடந்த 13.08.2014 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் ஓய்வு பெற்று விட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட 26 நீதிபதிகளில் ஒருவர் கூட சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த அனுபவமும், திறமையும் உள்ள நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

ஒரு காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் ஒரே நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். 2013-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சதாசிவம், இப்ராகிம் கலிபுல்லா, நாகப்பன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர். பின்னர் 2014-2016 காலத்தில் கலிபுல்லா, நாகப்பன், பானுமதி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக பானுமதி மட்டுமே தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றில் சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றங்களாக உருவாக்கப்பட்டு, விடுதலைக்கு பிறகு உயர்நீதிமன்றங்களாக மாற்றப்பட்டவை. இந்தியாவின் மிக மூத்த நீதிமன்றங்களான அவை தனிச்சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் பாதியளவினர் இந்த 3 உயர்நீதிமன்றங்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து 5 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஒருவர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் இருப்பது நீதியல்ல.

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 4 பேர் மும்பை உயர்நீதிமன்றத்தையும், மூவர் கர்நாடகத்தையும் சேர்ந்தவர்கள். ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கொல்கத்தா, தில்லி, அலகாபாத், பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்து தலா இருவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த இரு நீதிபதிகள் ஒரே நாளில் உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக ஒருவர் கூட உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வில் அனுப்பப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பால்வசந்தகுமார் அவர்களுக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் கூட அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்குப் பின் இப்போதுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதாகர், இராமசுப்பிரமணியன், மணிக்குமார், சுப்பையா, சத்யநாராயணா உள்ளிட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியானவர்கள்.

இந்தியாவின் மூத்த உயர்நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் புறக்கணிக்கப்படும் போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும். வரும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்கள் ஏற்படவிருக்கும் நிலையில், அவற்றில் தகுதியான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...